மனிதனால் உருவாக்கப்பட்ட விலை உயர்ந்த பொருள் என்ன தெரியுமா? ஆனால் பூமியில் இல்லை
மனிதனால் உருவாக்கப்பட்ட விலை உயர்ந்த பொருளை கின்னஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
கின்னஸ் அங்கீகாரம்
விலை உயர்ந்தது என்றாலே ஏதோ விண்ணை முட்டும் அடுக்கு மாடி கட்டிடமோ, விமானமோ அல்லது சொகுசு கப்பலோ என நினைக்கலாம். ஆனால் பூமியிலே இல்லாத இந்த பொருளை தான் கோடான கோடிகள் செலவழித்து உருவாக்கியுள்ளார்கள்.
மனிதனால் உருவாக்கப்பட்ட மிக விலையுயர்ந்த பொருள் என இதை கின்னஸ் நிறுவனம் அதிகார பூர்வமாக அங்கீகரித்துள்ளது.
சர்வதேச விண்வெளி மையம்
100 பில்லியன் அமெரிக்கா டாலர் (ரூ 83,80,82,00,00,000) மதிப்பில் உருவாக்கப்பட்ட சர்வதேச விண்வெளி மையம்தான் மனிதனால் உருவாக்கப்பட்ட விலை உயர்ந்த பொருளாகும்.
1980 ஆம் ஆண்டே அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா இந்த திட்டத்தை கையில் எடுத்தது. ஆனால் தனி நாடாக இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலையில் ரஷ்யா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகளின் விண்வெளி ஆய்வு நிலையங்களுடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
ஆய்வகம்
சந்திரன், செவ்வாய் மற்றும் சிறுகோள்களுக்கான எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்கான களமாக, நவம்பர் 20, 1998 இல் விண்ணில் ஏவப்பட்ட இந்த சர்வதேச விண்வெளி நிலையம் தற்போது ஒரு ஆய்வகம் மற்றும் தொழிற்சாலையாக செயல்படுகிறது.
விண்வெளியில் ஆய்வுக்காக செல்லும் நபர்கள் இங்குதான் தங்கி சோதனைகளை மேற்கொள்வார்கள். தற்போது வரை 200 க்கும் மேற்பட்டோர் ஆய்வுக்காக இங்கு சென்று வந்துள்ளனர். இதன் பராமரிப்புக்காக ஆண்டு தோறும் பில்லியன் கணக்கான டாலர்கள் செலவிடப்பட்டு வருகிறது.