எது Worth இல்லை?- விஜயை எதிர்த்து கேள்வி எழுப்பிய தவெக நிர்வாகி ரஞ்சனா
விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், நடிகர் விஜய்க்கு நடிகை ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும், அவருடன் வெளிநாடுகளுக்கு சென்று வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா ஒரே நிற பட்டுடையில் ஒன்றாக கலந்து கொண்டது பேசுபொருளானது.

இதனைத்தொடர்ந்து, தவெக சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, அக்கட்சியின் தலைவர் விஜய் விழாவில் பங்கேற்றார்.
அப்போது அவர், சமீபமாக நடக்கும் பிரச்சனைகளை பார்த்து நீங்கள் வருந்துவது எனக்கு வருத்தமாக இருக்கிறது. அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். அவ்வளவு எல்லாம் வருத்தப்படாதீர்கள். அது Worth இல்லை என்று பேசினார்.
இந்நிலையில், தவெக தலைவர் விஜயை விமர்சித்து தவெக நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வெளியிட்ட அறிக்கை
அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.
முக்கியமாக எங்கள் தலைவர், விஜய் அவர்களுக்கும் என் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
" பெண்ணியம் பேசும் உங்களிடம் கண்ணியம் உள்ளதா? "
நேற்று தமிழக வெற்றி கழகம் (TVK) சார்பாக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அந்த மேடையில் தலைவர் பல கருத்துகளை பகிர்ந்தார். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று - அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே நிலவிவரும் பிரச்சினையை நேரடியாகச் சொல்லாமல், கோடிட்டு காட்டும் விதத்தில் குறிப்பிட்டிருந்தது. “அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக்கொள்கிறேன். அது worth ஏ இல்லை” என்று கூறினீர்கள். அந்த ஒரு வாக்கியம் தான் இன்று பல கேள்விகளை எழுப்புகிறது. எது worth இல்லை தலைவா? உங்கள் மனைவியா? அல்லது உங்கள் திருமண வாழ்க்கையா?
ஒரு அரசியல் தலைவர் பேசும் ஒவ்வொரு சொல்லும், ஒரு குடும்பத்தில் மட்டும் ஒலிக்காது. அது ஒரு சமூகத்தின் மனதிலும் ஒலிக்கும். உங்கள் மனைவி அவர்கள் உங்கள் வீட்டுக்குள் அவர்களை அனுமதிக்கப்பட வேண்டுமென்று நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் என்று செய்திகள் வெளிவருகின்றன.
உங்கள் மனைவியை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருக்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டுகள் பேசப்படும் நேரத்தில், " வீட்டிற்கு ஆறு சிலிண்டர் இலவசமாக தருகிறேன்” என்று மேடையில் பேசுவது ஒரு கடுமையான முரண்பாடாக தெரியவில்லையா?
ஒரு பக்கம் பெண்கள் உயர்வு பற்றி பேசுகிறீர்கள். மற்றொரு பக்கம் பெண்களின் மரியாதையை காக்கும் மொழி கூட உங்கள் வார்த்தைகளில் காணப்படவில்லை என்றால், அந்த அரசியல் எதற்காக? உங்கள் உண்மை முகம்தான் என்ன ?
உங்களை தெய்வமாகக் கருதி வாழும் உங்கள் ரசிகர்கள், குறிப்பாக இன்றைய Gen-Z தலைமுறையினர், சமூக ஊடகங்களில் என்ன பேசுகின்றனர் தெரியுமா?"எங்கள் தலைவன் ஏழு பொண்டாட்டி கட்டுவான், அதில் தவறு இல்லை” என்று எழுதுபவர்கள் இருக்கின்றனர்.
"நான் உனக்கு பொண்டாட்டியாக வருகிறேன்; உன் மனைவியை விட்டு விலகிவிடு” என்று எழுதும் பதிவுகளும் இருக்கின்றன, இந்த மொழி யாரால் உருவாக்கப்பட்டது? இந்த மனநிலை எங்கே இருந்து வந்தது? ஒரு தலைவரின் சொல் ஒரு ரசிகனின் முழக்கமாக மாறும். ஒரு தலைவரின் செயல் ஒரு இளைஞனின் நடத்தை ஆகிவிடும்.
"தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே” என்ற பழமொழி உங்களுக்கு தெரியாதா? ஒரு நடிகையை கூட்டிக்கொண்டு பொது வெளியில் வரும்போது, அதை பார்த்து இன்றைய இளைஞர்கள் என்ன கற்றுக்கொள்வார்கள்? “திருமணத்திற்கு பின்பு நாமும் இப்படியே வாழலாம்” என்ற எண்ணம் அவர்களிடம் விதைக்கப்படாதா?
இது தான் நம் தமிழ் கலாச்சாரமா? தமிழ் பண்பாடு பெண்களை பொருளாக பார்க்கவில்லை. மரியாதையாக பார்த்தது. தமிழ் மரபு பெண்களை இழிவுபடுத்தவில்லை. அவர்களை உயர்த்தியது. நம் கலாச்சாரம் என்ன சொல்கிறது? இழவு வீட்டிற்கு சென்று கேதம் கேட்பதே நம் பண்பு.
அன்பும் மரியாதையும் காக்கும் வாழ்வே நம் வழி. துயரத்தில் இருக்கும் குடும்பங்களிடம் சென்று, அவர்களின் கண்ணீரை துடைப்பதே தமிழர் மரபு. அவர்களின் துயரத்தை பகிர்ந்து கொள்வதே மனிதநேயத்தின் அடையாளம். ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்? கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை, அவர்கள் துயரத்தில் இருக்கும் அந்த நேரத்தில், அவர்களையே உங்கள் இடத்திற்கு வரவைத்து இரங்கல் தெரிவித்தீர்கள்.
இது தான் நம் கலாச்சாரமா? இது தான் தமிழர் பண்பாட்டின் வழியா? துயரத்தில் இருக்கும் மனிதர்களிடம் செல்வதே மரபு, அவர்களை அழைத்து வருவது மரபல்ல. அதையும் "பரவாயில்லை” என்று ஏற்றுக்கொண்டு விட்டுவிட்டதால், இது ஒரு தவறான முன்னுதாரணமாக மாறி விட்டது. ஒரு தலைவர் உருவாக்கும் நடைமுறை, நாளைய அரசியலின் ட்ரெண்டாக மாறிவிடும். அதனால் தான் நான் கேட்கிறேன் - தமிழக அரசியலில் நாம் உருவாக்க வேண்டியது மரபை மதிக்கும் கலாச்சாரமா?
அல்லது மரபை மாற்றும் மோசமான ட்ரெண்ட் செட்டிங்களா? தமிழர் கலாச்சாரம் மரியாதையை கற்றுக் கொடுத்தது. அந்த மரியாதையை காக்கும் அரசியல் தான் தமிழகத்திற்கு தேவையான அரசியல் அந்த மரபை மாற்றும் வழியில் நாம் போகக் கூடாது.
Happy women’s day 💪@TVKPartyHQ @TVKVijayHQ pic.twitter.com/MfCjdD401I
— Ranjana Natchiyaar (@RanjanaNachiyar) March 8, 2026
எனது மூதாதையரான வேலுநாச்சியாரை கொள்கைத் தலைவராக கூறிக்கொண்டு, பெண்ணியம் பேசும் நீங்கள், உங்கள் சொந்த வாழ்க்கையிலும் அந்த கண்ணியத்தை காக்க வேண்டாமா? பெண்ணியம் என்பது மேடையில் முழக்கம் அல்ல.
வாழ்க்கையில் ஒழுக்கம். பெண் என்பது ஒரு உறவு மட்டும் அல்ல. ஒரு மரியாதை. இன்றைய Gen-Z தலைமுறையின் பெற்றோர்கள் கூட, உங்கள் செயல்-பேச்சுகளை பார்த்து மெதுவாக கவலைப்படத் தொடங்கியுள்ளனர். நன்றாக வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு அரசியல் இயக்கம், தலைவரின் தனிப்பட்ட ஒழுக்கம் காரணமாக தேய்ந்து போகக் கூடாது. அது உங்களுக்கு தெரியவில்லையா? அல்லது தெரிந்தும் புறக்கணிக்கிறீர்களா?
"பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய் மாமனாக சீர் கொடுப்பேன்" என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். அது நல்ல எண்ணம். ஆனால் அடுத்த குழந்தைக்கு தாய் மாமனாக இருப்பதற்கு முன், பெற்ற குழந்தைகளுக்கு தகப்பனாக இருப்பது முக்கியம் இல்லையா ?
நீங்கள் சீர் கொடுக்க வேண்டாம் தலைவா, இளைஞர்களை சீர் குலைக்காமல் இருப்பதே சிறந்தது. ஒரு தலைவர் சமூகத்திற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஒரு தலைவர் உருவாக்கும் கலாச்சாரம் தான் ஒரு தலைமுறையை உருவாக்கும்.
TVK ல் உங்களுடன் இணைந்து பயணிக்கும் நான் அக்கறையுடன் எச்சரிக்க வருகிறேன். மோசமான ட்ரெண்ட் செட்டராக மாறிவிடாதீர்கள். தமிழக இளைஞர்களுக்கு நல்ல முன்னுதாரணமாகவே இருங்கள்.
நம் மதிப்பையும் மரியாதையும் நாம் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், அந்த மரியாதையை உயர்த்தவோ அல்லது மெதுவாகக் குறைக்கவோ செய்கிறது.
சரியோ தவறோ அதைப் பற்றி பேசாமல் மௌனம் காப்பது அறிவுடைமை அல்ல. சமுதாயத்திற்கு நாம் செய்யும் துரோகம். ஏனெனில் மௌனம் பல நேரங்களில் ஒப்புதலாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. அதனால் நம் மரபையும், நம் மதிப்பையும், நம் மரியாதையையும் காக்க தேவைப்படும் போது குரல் கொடுப்பதே ஒரு பொறுப்புள்ள சமூகத்தின் அடையாளம் மேலும் ஒரு தலைவனின் பண்பு.
தமிழக வெற்றிக்கழகத்தில் பயணித்துக்கொண்டே இதை நான் சுட்டிக்காட்டாவிட்டால் அது நம் கழகத்துக்கும், மக்களுக்கும், உங்களை நம்பியிருக்கும் இளைஞர்களுக்கும் நான் செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும் என்று கூறியுள்ளார்.