“மரணத்திற்கு 4 நாட்கள் முன்பு வரை ஜெயலலிதா நல்லா தான் இருந்தாங்க” - அப்பல்லோ டாக்டர் பரபரப்பு வாக்குமூலம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நிலையான மற்றும் மருத்துவ நெறி முறைப்படியே சிகிச்சை வழங்கப்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் ஆறுமுகசாமி ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி காலமானார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 75 நாட்கள் தொடர் சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் உயிரிழந்தார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் கூறப்பட்டு வரும் நிலையில் அதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணையம் சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு விசாரணையை தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஜெயலலிதா மரணம் தொடர்பாக 154 பேரிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி முடித்து அனைவரது பதில்களும் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா உறவினர் இளவரசி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவர்கள் 11 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் கடந்த 2 நாட்களாக ஆறுமுகசாமி ஆணையத்தில் வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.
அப்போது வாக்குமூலம் அளித்த மருத்துவர் நரசிம்மன் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 1 அன்று அதாவது ஜெயலலிதா இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பாக தான் ஜெயலிதாவை சந்தித்ததாகவும் அப்போது அவர் நலமுடன் இருந்ததாகவும் கூறியுள்ளார். இன்றும் விசாரணை நடைபெறும் நிலையில் அப்பல்லோ மருத்துவர்களிடம் நடத்தப்பட உள்ள குறுக்கு விசாரணையுடன் விசாரணை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் விசாரணை தொடர்பான அனைத்து விவரங்களும் அறிக்கையாக தயார் செய்யப்பட்டு தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது.