அடுத்த முறை நேரில் வரவில்லையென்றால் பிடிவாரண்ட்தான்: முன்னாள் காவல் அதிகாரிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை
விசாரணைக்கு நேரில் வரவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என முன்னாள் காவல் அதிகாரி ராஜேஷ் தாஸுக்கு விழுப்புரம் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் எஸ்.பிக்கு சிறப்பு டிஜிபி அந்தஸ்தில் இருந்த ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
அந்தப் புகாரின் பேரில் சிறப்பு டிஜிபி மற்றும் பெண் எஸ்.பிஐ புகார் அளிக்க விடாமல் தடுத்த செங்கல்பட்டு எஸ்.பி ஆகிய இருவர் மீது வழக்கு பதியப்பட்டது. இருவரும் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்தப் புகார் குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
அந்த குழு விசாரணையை நிறைவு செய்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தது. அதே வேளையில் சிபிசிஐடி போலீசாரும் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரிய ராஜேஷ் தாஸின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் , நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், வேறு நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றக் கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், வழக்கை 3 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த நிலையில், இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்த போது ராஜேஷ் தாஸ் நேரில் ஆஜராகவில்லை. ஆகவே வரும் 1ம் தேதிக்குள் ராஜேஷ்தாஸ் ஆஜராகாவிட்டால் முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.