கொசுக்கடியால் உயிரே போகும் அபாயம் - புது வைரஸால் நடுங்கும் உலக நாடுகள்!
வெஸ்ட் நைல் எனும் வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
வெஸ்ட் நைல் வைரஸ்
ஐரோப்பாவில் பல நாடுகளில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக இத்தாலி, பிரான்ஸ், கிரீஸ், பல்கேரியா மற்றும் ருமேனியா போன்ற நாடுகளில் மனிதர்களுக்கு இந்த வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் கடைசி ஒரு வாரத்தில் மட்டும் இத்தாலியில் 57 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணம் கொசுக்கள் தான். பொதுவாக பறவைகளின் உடல்களில் காணப்படும்.
அறிகுறிகள்
காக்கைகள் போன்ற பறவைகள் இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட பறவைகளை கொசுக்கள் கடிக்கும் பொழுது இந்த வைரஸ் கொசுக்களுக்கு பரவுகிறது. வைரஸ் பாதித்த கொசுக்கள் மனிதர்களை கடிக்கும் பொழுது அந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது.
இந்த வைரஸ் ஒருவரால் இன்னொருவருக்கு தொற்றுவதில்லை. இந்த வைரஸ் ஏற்பட்டவர்களுக்கு பெரும்பாலானோருக்கு (80%) எந்த அறிகுறிகளும் தெரியாது. சில சமயங்களில் காய்ச்சல், தலைவலி, உடல் வலி, தசை வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, தோல் அரிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வைரஸ் சொற்று ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. தற்போது வைரஸை கட்டுப்படுத்துவதற்கு பல நாடுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.