ரயில்கள் மோதி பயங்கர விபத்து; உயரும் பலி எண்ணிக்கை - விபத்து யாருடைய தவறு?
மேற்கு வங்க ரயில் விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ரயில் விபத்து
மேற்கு வங்கம், நியூ ஜல்பைகுரியில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியது. இந்த ரயில் அசாமின் சில்சாரில் இருந்து மேற்கு வங்கத்தின் சேல்டா மாவட்டம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது.
அப்போது பின்னால் இருந்து சரக்கு ரயில் மோதியதில் கஞ்சன்ஜங்கா ரயிலின் 3-ல் இருந்து 5 பெட்டிகள் வரை சேதமடைந்தன. இதில், 15 பேர் உயிரிழந்துள்ளனர். 40-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, விபத்து நடந்தது எப்படி என்பது தொடர்பாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. ராணிபத்ரா ரயில் நிலையம் மற்றும் சத்தர் ஹட் சந்திப்பு இடையேயான ஆட்டோமேட்டிக் சிக்னல் பழுதடைந்து இருந்துள்ளது. இந்த நிலையில் தான் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுள்ளது.
என்ன காரணம்?
வழக்கமாக ஆட்டோமேட்டிக் சிக்னலில் பழுது ஏற்பட்டால், ரயில் சிக்னலை கடக்க சம்பந்தப்பட்ட ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் TA 912 எனப்படும் எழுத்துபூர்வ அதிகாரத்தை ரயில் ஓட்டுநருக்கு அளித்த பின்பே லோகோ பைலட்டால் ரயிலை இயக்க முடியும்.
கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலை பொறுத்தவரை பழுதான சிக்னலை கடக்க ராணிபத்ரா ரயில் நிலைய மேலாளர் TA 912 எனப்படும் எழுத்துபூர்வ அதிகாரத்தை வழங்கியுள்ளார். அதேநேரம், சரக்கு ரயிலும் ரங்கபாணி நிலையத்தில் இருந்து ராணிபத்ரா நோக்கி புறப்பட்டுள்ளது.
ஆனால், சரக்கு ரயில் பழுதான சிக்னலை கடக்க TA 912 எனப்படும் எழுத்துபூர்வ அதிகாரத்தை எந்த ஸ்டேஷன் மாஸ்டரும் கொடுக்கவில்லை. சரக்கு ரயிலின் லோகோ பைலட் விதிகளை மீறி பழுதான சிக்னலை கடந்து சென்றதாக ரயில்வே கூறியுள்ளது. இதுவே, விபத்துக்கான காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.