”மோடியைப் போல் பொய் பேசுபவரை நான் பார்த்ததில்லை” - மம்தா பேனர்ஜி ஆவேசம்
தமிழகத்தோடு சேர்த்து மேற்கு வங்கத்திலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. 294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க சட்டமன்றத்திற்கு எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. திரினாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் - சிபிஎம் கூட்டணி என இந்தத் தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது. அதில் பாஜக - திரினாமுல் காங்கிரஸ் இடையே தான் பிரதான போட்டி நிலவுவதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மம்தா பேனர்ஜி மூன்றாவது முறையாகவும் ஆட்சியைப் பிடித்துவிடும் முனைப்பில் இருந்து வருகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தல் 18 இடங்களையும் 40% வாக்குகளையும் பெற்ற பாஜக மேற்கு வங்கத்தில் எப்படியாவது முதல் முறையாக ஆட்சியைப் பிடித்துவிடும் முயற்சியில் இருக்கிறது.
தமிழகத்தை விடவும் இந்தத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் தான் பாஜக தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தொடங்கி பாஜக முதலமைச்சர்கள் வரை மேற்கு வங்கத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று பிஷ்னுபூர் என்கிற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய மம்தா பேனர்ஜி, “பிரதமர் இருக்கை மீது எனக்கு பெரும் மதிப்பு உண்டு. பல பிரதமர்களை நான் பார்த்திருக்கிறேன்.
ஆனால் மோடியைப் போல பொய் பேசுபவரை நான் பார்த்ததில்லை. அவர் பொய் மட்டுமே பேசுகிறார். வெளி மாநிலத்திலிருந்து பாஜக ரவுடிகளை இங்கு அழைத்து வருகிறது. பாஜகவின் அராஜகம் தாங்காமல் உத்திரப் பிரதேசத்தில் பல அதிகாரிகள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு செல்கின்றனர். விவசாயிகள் பல மாதங்களாக போராடி வருகின்றனர்.
ஆனால் மத்திய அரசு அவர்களை கண்டுகொள்ளவில்லை. அதானிக்காக மட்டுமே இந்த அரசு செயல்படுகிறது. அதானி வந்து அனைத்தையும் கொள்ளையடித்து செல்கிறார்” என்றார்.