மேற்கு வங்கத்தில் அதிரடி காட்டும் மம்தா பேனர்ஜி: நந்திகிராமில் களம் இறங்குகிறார்
தமிழகத்தோடு சேர்த்து மற்றுமொரு முக்கியமான மாநிலமான மேற்கு வங்கத்திற்கு எட்ட கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தி பேசும் மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துவிட்ட பாஜகவுக்கு மேற்கு வங்கம் மிகப்பெரிய சவாலாக உள்ளது. தமிழகத்தை விடவும் மேற்கு வங்கத்தில் தான் இந்த தேர்தலில் பாஜக அதிக கவனம் செலுத்தி வருகிறது.
அங்கு பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார் முதல்வர் மம்தா பேனர்ஜி. மேற்கு வங்கத்தில் திரினாமுல், பாஜக, காங்கிரஸ் - இடதுசாரிகள் என மும்முனை போட்டி இருந்தாலும் பாஜக - திரினாமுல் இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. இதில், திரிணமூல் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ளார்.
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் சார்பில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். இதுகுறித்து மம்தா பேசுகையில், தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 50 பெண்கள், 79 தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள், 42 இஸ்லாமியர்கள், 17 பழங்குடியினர் வேட்பாளர்கள் அடங்கிய 291 வேட்பாளர்களின் பட்டியலை இன்று வெளியிடுகிறோம்.
வடக்கு மேற்குவங்கத்தின் 3 தொகுதிகளில், நாங்கள் எங்கள் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. மேலும், நான் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறேன் எனத் தெரிவித்தார்.
நந்திகிராம் தொகுதியில் இருந்து தான் மேற்கு வங்க அரியணையை கைப்பற்றினார் மம்தா. தற்போதைய நந்திகிராம் எம்.எல்.ஏ பாஜக சேர்ந்துவிட்டதால் அந்த தொகுதியில் மம்தா மீண்டும் களமிறங்குகிறார்.
மம்தா பேனர்ஜியை நந்திகிராமில் வீழ்த்தியே தீருவோம் என பாஜக சூளுரைத்துள்ளது. 50000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என திரினாமுல் பதிலடி கொடுத்துள்ளது.