மேற்குவங்கத்தில் பாஜக பந்த் - ஹெல்மெட் அணிந்து பேருந்து ஓட்டும் ஓட்டுநர்கள்
மேற்கு வங்கத்தில் பாஜக பந்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் பேருந்து ஓட்டும் ஓட்டுநர்கள் ஹெல்மெட் அணிந்து வாகனங்களை இயக்குகின்றனர்.
மாணவர் பேரணி
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என கொல்கத்தா மாணவர் சங்கம் அறிவித்து தற்போது வரை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மேற்கு வங்க தலைமைச் செயலகம் நோக்கி நேற்று (27.08.2024) ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி நடத்தினர்.
பேரணியில் வன்முறை
இந்த பேரணியை ஹௌரா பாலத்தின் அருகே தடுப்புகள் வைத்து காவல் துறை தடுத்து நிறுத்தியது. தடுப்புகளை மீறி மாணவர்கள் செல்ல முயன்றதால் காவல்துறை தடியடி நடத்தினர். மேலும், தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர்புகை குண்டுகளும் வீசியதால் பேரணி வன்முறையாக மாறியது. இதில் 100 மாணவர்களும், 15 காவல்துறையினரும் காயமடைந்தனர். மேலும் பல மாணவர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து இன்று(28.08.2024) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேரத்துக்கு மேற்கு வங்கம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என மாநில பாஜக அறிவித்துள்ளது.
இதன்படி காலை 6 மணி முதல் பந்த் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஹூக்லியில் பாஜகவினர் ரயில் மறியலில் ஈடுபட்டதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. பதற்றம் நிறைந்த பகுதிகளில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் ஹெல்மட் அணிந்து வாகனங்களை ஓட்டி வருகின்றனர். கூச் பெஹாரில் 2 பாஜக எம்.எல்.ஏ க்கள் தடுப்புக் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.
பின்னணியில் பாஜக
இன்றைய பந்த் காரணமாக மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய சேவைகள் ஏதும் பாதிக்கப்படாது என மாநில முதல்வரின் முதன்மை ஆலோசகர் அலப்பன் பந்தோப்தயாய் உறுதி அளித்துள்ளார். போக்குவரத்து சேவை இயல்பாக இருக்கும் எனவும், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கும் வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாநில அரசுப் பணியாளர்களும் வழக்கம்போல் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பேசிய திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் குனால் கோஷ், “பந்த் அழைப்பு மூலம் நேற்றைய பேரணியில் ஏற்பட்ட வன்முறையின் பின்னணியில் பாஜகவே இருக்கின்றது என்பது அம்பலமாகியுள்ளது. பாஜகவின் இந்தத் திட்டத்தை அறிந்துள்ள மக்கள் இன்றைய முழுஅடைப்புப் போராட்டத்தைப் புறக்கணிப்பார்கள் என நம்புகிறேன்”என்று தெரிவித்துள்ளார்.