வார இறுதி நாட்களில் வழிபாட்டு தளங்கள் திறக்கப்படுமா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
கொரோனா கட்டுப்பாடுகளிலிருந்து கூடுதல் தளர்வு அளிப்பது குறித்தும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களைத் திறப்பது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடந்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து, தினசரி பாதிப்பு சராசரியாக 1,300 என்ற அளவில் இருந்து வருகிறது.
நேற்று 1,289 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் 164 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 18 பேர் உயிரிழந்தனர் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும்,
வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத் தலங்கள் பொதுமக்கள் வழிபாட்டுக்காகத் திறக்கப்படுவதில்லை.
இந்நிலையில், வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அனைத்து நாட்களிலும் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற 12 கோயில்கள் முன் பாஜகவினர் கடந்த வாரம் போராட்டம் நடத்தினர்.
மேலும், விஜயதசமி நாளான வெள்ளிக்கிழமை அன்று கோயில் திறக்கப்பட வேண்டும் என்று கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஆர்.பொன்னுசாமி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், இன்று (புதன்கிழமை) தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது.
இதில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இதில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களைத் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.