நாய்களுக்கு வரன் பார்த்து நடைபெற்ற திருமணம் - கேரளாவை அதிரவைத்த சம்பவம்
கேரளாவில் மனிதர்களை போல் முறைப்படி வரன் பார்த்து நாய்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திரிசூர் மாவட்டம் வாடானப்பள்ளி பகுதியில் வளர்ப்பு நாய்களான ஆசிடும், ஜான்விக்கும் தான் இந்த திருமணம் நடந்துள்ளது. பிகிள் இனத்தை சேர்ந்த ஆசிட் என்ற நாய்க்கு அதன் உரிமையாளர்களான ஆகாஷ் மற்றும் அர்ஜுன் ஆகியோர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக துணையை தேடி அலைந்துள்ளனர்.
கடைசியாக புன்னையூர் குளம் என்ற பகுதியில் நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் ஒருவரிடம் ஜான்வி என்ற துணைவியை கண்டுபிடித்து விலை கொடுத்து வாங்கியுள்ளனர். அதன்பின் ஆகாஷ் மற்றும் அர்ஜுனின் தாய், தந்தை அவர்கள் விருப்பத்திற்கு இணங்க மனிதர்களுக்கு திருமணம் நடப்பது போல் அனைத்து வகையான ஏற்பாடுகளுடன் திருமண பந்தல் தயாரானது.
நாய்களுக்கு பட்டு புடவை, புத்தாடைகள் அணிவித்து மாங்கல்ய மாலைகள் மாற்றி, திருமண கேக் வெட்டி திருமணமானது நடைபெற்றுள்ளது. இந்த திருமண விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை உணவு விருந்தும் பரிமாறப்பட்டது.
கேரளாவில் நடைபெற்ற இந்த ருசிகர சம்பவம் காண்போரை நெகிழ வைத்ததோடு மட்டுமல்லாமல் சக மனிதர்களையே மதிக்காத இந்த உலகில் தாங்கள் வளர்க்கும் செல்ல பிராணிக்கு, தங்கள் பிள்ளைகளை போல பாசம் காட்டும் குடும்பம் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் முடிந்ததும் ஆசிட் மற்றும் ஜான்விக்கு ப்ரீ வெடிங் வீடியோ மற்றும் சேவ் தி டேட் போட்டோஸ் எடுக்கப்பட்டு அது வைரலானது குறிப்பிடத்தக்கது.