கொட்டும் மழை - ஆனா புயல், காற்றழுத்த நிலை இல்லை..எப்படி..?வெதர் மேன் ரிப்போர்ட் ..!
சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகின்றது.
சென்னையில் மழை
நேற்று முதல் சென்னையில் பரவலாக மழை பெய்து வருகின்றது. காற்றழுத்த தாழ்வு நிலையோ, புயலோ உருவாகாத நிலையிலும் மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் மழை பெய்து வருவதால் பெரும்பாலான மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நேற்றிரவு 8.30 மணி நிலவரப்படி சென்னை எண்ணூரில் 86.5 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ள நிலையில், நாகைப்பட்டினத்தில் 90 மில்லி மீட்டரும், காரைக்காலில் 22 மில்லி மீட்டரும் மழை பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை ஏன்..?
புயல் இல்லை என்றாலும் மழை ஏன் பொழிகிறது என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள வெதர் மேன், சென்னையில் மிக கனமழை பெய்யவில்லை. அதேநேரம் அடர்த்தியான மழை மேகக்கூட்டங்கள் சென்னைக்கு தெற்கிலிருந்து மகாபலிபுரம் வரை உள்ளது.
ஆகவே ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். டெல்டாவில் இருந்து சென்னை வரை ஏற்கெனவே மிக கனமழை பெய்துள்ளது. திருவாரூர், சீர்காழி போன்ற இடங்களில் அதிகனமழை பதிவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இது புயல்சின்னமோ, புயலோ, காற்றழுத்த பகுதியோ கிடையாது. கிழக்கில் இருந்து வரும் காற்றும் மேற்கில் இருந்து வரும் காற்றும் ஒன்றிணைகின்றன. இம்மாதிரியான சூழலில் மழையை கணிப்பது கடினம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.