தமிழகத்துக்கு நீரை திறந்துவிடும் பேச்சுக்கே இடமில்லை - துணை முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்!
தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட மாட்டோம் என கூறிய கர்நாடக துணை முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டி.கே.சிவகுமார்
பெங்களுருவில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் கடும் வாதிகளுக்கு ஆளாகி உள்ளனர்.இந்நிலையில், காவேரியில் இருந்து தமிழகத்திற்கு நீர்திறக்கப்படுவதை கண்டித்து மண்டியில் கர்நாடக விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
அப்போது இந்த சங்கத்தின் தலைவைரான கோடியள்ளி சந்திரசேகர், மைசூரு, மண்டியா விவசாயிகளின் விவசாயதேவைக்கு காவிரி நீர் திறக்கப்படவில்லை.பெங்களூருவில் குடிநீர் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு நீர் வழங்கப்படவில்லை. ஆனால் தமிழகத்துக்கு மட்டும் நீரை திறந்துவிடுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
இதை குறித்து கர்நாடக துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, பெங்களூருவுக்கு தேவையான குடிநீரை வழங்குவதில் கர்நாடக அரசு உறுதியாக இருக்கிறது.
காவிரி நீரைக் கொண்டு பெங்களூருவின் தாகம் தணிக்கப்படும். முன்பை விடஅதிகளவிலான நீர் பெங்களூருவுக்கு கொண்டுசெல்லப்படுகிறது. நீரின் அளவை பொறுத்து விவசாய தேவைகளுக்கும் வழங்கப்படும். பெங்களூருவில் நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்துக்கு நீரை திறந்துவிடும் பேச்சுக்கே இடமில்லை.
நாங்கள் எக்காரணம் கொண்டும் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட மாட்டோம். இப்போது கோடை காலமாக இருப்பதால், காவிரி ஆறு முற்றிலுமாக வறண்டு போய் உள்ளது. இந்த நிலையில் கர்நாடகா காவிரி நீரை திறந்துவிட்டால், தமிழகத்தை சென்றடைய 4 நாட்கள் ஆகும்.
எனவே காவிரி நீரை திறந்துவிட்டுள்ளதாக அரசியல் உள்நோக்கத்துடன் பொய்யான தகவல்களை மக்களிடம் கொண்டு செல்லக்கூடாது என்று இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஈபிஎஸ் கண்டனம்
துணை முதல்வரான சிவகுமாரின் பேச்சுக்கு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடும் கண்டனம் தெரிவித்தார்.இது தொடர்பாக அவரது சமூக வலைதளத்தில், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் கருத்து, மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனைகளில், தேசிய கட்சிகளின் இரட்டை நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காவிரி விவகாரத்தில், தமிழக அரசு தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து, காவிரி மீதான நமது உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.