தோல்விகளை அடைந்து வருகிறோம்; 'கேப்டனாக மிகவும் வருந்துகிறேன்' - ஜாஸ் பட்லர் வேதனை!

Cricket England Cricket Team Jos Buttler ODI World Cup 2023
By Jiyath Oct 27, 2023 09:15 AM GMT
Report

உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி தோல்விகளை சந்தித்து வருவதால் "ஒரு கேப்டனாக மிகவும் வருந்துகிறேன்" என்று ஜாஸ் பட்லர் பேசியுள்ளார்.

இங்கிலாந்து அணி

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆரம்பம் முதலே நடப்பு சாம்பியன்ஸ் இங்கிலாந்து அணி தோல்வியை மட்டுமே சந்தித்தது.

தோல்விகளை அடைந்து வருகிறோம்;

இதுவரை 5 போட்டிகளில் விளையாடி, அதில் 4 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்து வங்கதேசதுடனான ஒரு போட்டியில் மட்டுமே இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் அந்த அணி புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. அவர்களின் மோசமான ஆட்டத்தால் அந்நாட்டு ரசிகர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் இங்கிலாந்து அணி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கைக்கு எதிரான போட்டிக்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் உணர்ச்சிவசப்பட்டு பேசியிருந்தார். அவர் பேசியதாவது "தோல்வி என்பதைத் தாண்டி அணியை பாதிக்கும் வகையில் பெரிய தோல்விகளை அடைந்து வருகிறோம். அணியின் கேப்டனாக நான் மிகவும் வருந்துகிறேன். எங்களால் சிறப்பான ஆட்டத்தை அளிக்க முடியாதது ஏமாற்றமளிக்கிறது.

ஜாஸ் பட்லர் வேதனை

எங்களிடம் நிறைய அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். நிறைய திறமைசாலிகள் இருக்கிறார்கள். நாங்கள் நடப்பு சாம்பியனாக இருக்கிறோம். விமானத்தில் இந்தியா வந்து இறங்கியபோது ரொம்பவே நேர்மறையான எண்ணத்தோடு இருந்தோம்.

தோல்விகளை அடைந்து வருகிறோம்;

ஆனால், இங்கே எங்களால் சரியாக பெர்ஃபார்ம் செய்யவே முடியவில்லை. உங்களுக்கான ரன்களை நீங்கள்தான் எடுக்க வேண்டும். உங்களுக்கான விக்கெட்டுகளை நீங்கள்தான் வீழ்த்த வேண்டும். வேறு யாரும் வந்து அதைச் செய்து கொடுக்கமாட்டார்கள். ஒரு கேப்டனாக முன் நின்று என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டி அணிக்கு உத்வேகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், என்னால் அதை செய்ய முடியவில்லை.

ஒரே இரவில் நாங்கள் மோசமான அணியாக மாறிவிட மாட்டோம். இனிவரும் போட்டிகளில் நன்றாக விளையாட விரும்புகிறோம். இந்த அணியை வழிநடத்தி சரிவிலிருந்து மீட்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என் கேப்டன் பதவி பற்றி கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால், அதுகுறித்து எனக்கு மேல் இருக்கும் அதிகாரிகள்தான் முடிவு செய்ய வேண்டும்" என்று வருத்தத்துடன் பேசியுள்ளார் ஜாஸ் பட்லர்.