பாராளுமன்ற தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களை விரட்டி அடிப்போம்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
பாராளுமன்ற தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களை விரட்டி அடிப்போம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
தி.மு.க. பவள விழா
வேலூர் மாவட்டம் அடுத்த பள்ளிகொண்டா, கந்தனேரியில் தி.மு.க. பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், இந்த விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவில் பேசினார்.
உதயநிதி பேச்சு
அவர் பேசியதாவது "திமுகவை எந்த கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்று கருணாநிதி கூறுவார். இயக்கத்தை மட்டுமின்றி இங்குள்ள எந்தவொரு கிளை செயலாளரையும் கூட தொட்டுக் கூட பார்க்க முடியாது.
இப்போது திமுகவில் பல்வேறு அணிகளுக்கும் ஒவ்வொரு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இளைஞரணி சார்பில் நூலகம், பேச்சுப் போட்டி, மாரத்தான் போட்டிகளை நடத்துகிறது. மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக வாழ்த்து தெரிவிக்கிறார்கள். நான் இப்போது வேலூர் வந்த போதும், என்னைச் சூழ்ந்து கொண்டு இந்தத் திட்டத்திற்கு நன்றி தெரிவித்தார்கள்.
இந்தியாவிலேயே மிகப் பெரிய திட்டமாக இது இருக்கிறது. இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய மாநாடாக இளைஞரணி மாநாடு இருக்கும். சட்டமன்ற தேர்தலில் அடிமைகளை விரட்டியடித்தோம். பாராளுமன்ற தேர்தலில் அடிமைகளுடன் சேர்த்து, அடிமைகளின் எஜமானர்களை விரட்டி வீட்டுக்கு அனுப்புவோம்' என்று உதயநிதி பேசியுள்ளார்.