தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவமரியாதை செய்தது எங்களுக்கு வலிகிறது - செல்லூர் ராஜு
கர்நாடகா முதல்வர் பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வரை பொத்தாம் பொதுவாக நிற்க வைத்து அவமரியாதை செய்துள்ளனர் அது திமுகவிற்கு வலிக்கிறதோ இல்லையோ எங்களுக்கு வலிக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
ஆளுநரை சந்திக்க உள்ளோம்
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது, ‘’திமுக எவ்வளவு பெரிய ஊழல் செய்துள்ளது என்பதை நிதி அமைச்சர் ஆடியோ மூலம் வெளிவந்தது அதனை எடப்பாடியார் மக்களிடம் கொண்டு சேர்த்தார்.
கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம் நாளைய தினம் தமிழகத்திலிருந்து முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஆளுநரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம்.
2000 ரூபாய் விவகாரத்தில் கால அவகாசம் கொடுத்து தான் மத்திய அரசு அறிவித்துள்ளது அதனால் எந்த பாதிப்பும் இல்லை மத்திய அரசு இதை செய்வதில் எந்தவிதமான சங்கடமும் எங்களுக்கு கிடையாது. அதனால் அதனை நாங்கள் வரவேற்கிறோம்.
திமுக ஒரு ரவுடி கட்சி
திமுகவின் மாவட்டத்துணை செயலாளர், வாளை வைத்து பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள் என்றால் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு போடப்பட வேண்டும் எங்கள் ஆட்சியில் போடப்பட்டது திமுக என்ன செய்யப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் இதன் மூலம் திமுக ஒரு ரவுடி கட்சி, ஆபத்தான கட்சி என்பதை அவர்களை நிரூபிக்க வண்ணம் செய்து வருகிறார்கள் மக்களை மிரட்டும் வகையில் அவர்களது நடவடிக்கைகள் உள்ளது.
தமிழக அரசு ஜனநாயக முறைப்படி ஆட்சி செய்கிறது என்றால் உடனடியாக அவர்கள் மீது முறையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் காங்கிரஸ் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வருவோம் என கூறுவது அவர்கள் கனவுலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
எங்களுக்கு வலிக்கிறது
கர்நாடகா முதல்வர் பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வரை பொத்தாம் பொதுவாக நிற்க வைத்தது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. முதல்வருக்கு அவமரியாதை நடந்துள்ளது. திமுககாரங்களுக்கு வலிக்கிதோ இல்லையே எங்களுக்கு வலிக்கிறது.
எந்த அளவிற்கு கர்நாடக அரசு தமிழகத்தை புறக்கணிக்கிறது என்பதை நேற்றைய தினத்தில் பார்க்க முடிந்தது முதலமைச்சருக்கு அவமரியாதை நடந்துள்ளது இதனை நாங்கள் கண்டிக்கிறோம்’’ என்றார்.