பழனியில் நீர் தட்டுப்பாட்டிற்கு முடிவு : மக்கள் பயன்பாட்டிற்கு வரும் கோடைகால நீர்தேக்கம்
பழனி கோடைகால நீர் தேக்க விரிவாக்க பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. விரைவில் படிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. பழனி நகரின் குடிநீர் ஆதாரமாக பாலாறு அணை மற்றும் கோடைக்கால நீர்தேக்கம் ஆகியவை உள்ளன.
இந்நிலையில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் மக்கள்தொகை எண்ணிக்கை காரணமாக குடிநீரின் அளவும்,தேவையும் அதிகரித்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு கடந்த அதிமுக ஆட்சியின்போது 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழனி கோடைகால நீர்தேக்கத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் துவங்கப்பட்டது.
இதன்படி 25 ஏக்கர் பரப்பளவு நிலங்கள் கையகபடுத்தப்பட்டு நீர்த்தேக்கத்தை விரிவுபடுத்தி, கரைகள் உயர்த்தப்பட்டு பழனி நகருக்கு குழாய்கள் பதிக்கும் பணிகள் நிறைவடைந்தது.தொடர்ந்து நடைபாதை, மின்விளக்குகள் ஆகியவை அமைக்கும் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் தாமதமடைந்த பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவாக பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.