சென்னையில் 200 மில்லியன் லிட்டர் குடிநீர் பற்றாக்குறை - தப்பிக்குமா தலைநகரம்? அமைச்சர் பரபரப்பு பேச்சு..
சென்னையில் 200 மில்லியன் லிட்டர் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் கோயில் குளத்தை சீரமைக்கும் பணி ரூபாய் 1.58 கோடி செலவில் நடைபெற உள்ளது.
அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு,நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு,சிங்கார சென்னை திட்டத்திற்கு கடந்த ஆண்டு முதலமைச்சர் 500 கோடி ரூபாய் வழங்கினார்.
அதே போல தற்போதும் இந்த ஆண்டும் 500 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஆயிரத்து 100 எம்எல் டி ( மில்லியன் லிட்டர்) தண்ணீர் தேவை.
தற்போது 900 எம். எல்.டி மட்டுமே உள்ளதால், 200 எம்.எல்.டி பற்றாக்குறையாக இருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 538 எம் எல் டி தண்ணீர் கொண்டு வரப்பட உள்ளது.
அதற்காக சாலைகளில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலை நிர்வாகத்துறை தற்போது அனுமதி அளித்துள்ளது.
ஒரு மாதத்தில் அந்த பணிகள் முடிந்துவிடும். அதேபோல் நீர் ஏற்ற நிலையங்களில் பழுதாக உள்ள மோட்டார்களில் முதற்கட்டமாக 60 மோட்டார்களை மாற்றி நீர் ஏற்றும் வகையில் தயார் செய்துள்ளோம். தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் சமச்சீராக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தின் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதாகவும் தெரிவித்தார்