ஒடிசா ரயில் விபத்திற்கு இது தான் காரணமா? - வெளியான திடுக்கிடும் தகவல்..!
ஒடிசா ரயில் விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. இதில், ரயில்வே சிக்னல் செயலிழந்ததன் விளைவாகவே இந்த கோர விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிக்னல் கோளாறு தான் காரணமா?
பெங்களூரு - ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சாலிமர்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் உள்ளிட்ட ரயில்கள் மோதிய விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இது நாட்டின் மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாகும். ஒடிசா ரயில் விபத்துக்கு சிக்னல் கோளாறுதான் காரணம் என்று முதற்கட்ட விசாரணை ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்திற்கான காரணம் என்ன?
அந்த அறிக்கையில், "12841 ரயிலுக்கு சிக்னல் கொடுக்கப்பட்டு அப் மெயின் லைனுக்காக எடுக்கப்பட்டது. ஆனால் ரயில் லூப் லைனுக்குள் நுழைந்து அப் லூப் லைனில் இருந்த சரக்கு ரயிலுடன் மோதி தடம் புரண்டது.
இதற்கிடையில், 12864 ரயில் டவுன்வார்டு பிரதான பாதை வழியாகச் சென்று பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தன" என்று அது கூறப்பட்டுள்ளது. முன்னதாக, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஒடிசாவின் பாலசோரில் ரயில் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் முக்கிய கவனம் செலுத்துவதாகக் கூறினார்.ஒடிசா ரயில் விபத்து குறித்து தென்கிழக்கு வட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரிப்பார் என்றும் தெரிவித்தார்.
பிரதமர் நேரில் ஆய்வு
ஒடிசாவில் நடந்த ரயில் விபத்துக்கான முழுமையான காரணம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அறிக்கை சமர்ப்பித்த பிறகே தெரியவரும் என ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். பின்பு அதிகாரிகளிடம் மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.