‘பத்தல பத்தல’ பாடல் வரிகளை நீக்கக்கோரி வக்கீல் நோட்டீஸ் - சட்ட ரீதியான நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை!
மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
ஏற்கனவே படத்தின் முன்னோட்டம் 2020-ம் ஆண்டு கமல் பிறந்தநாளன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் பெரும் வரவேற்பை பெற்றது.
கமல்ஹாசன்,விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன், ’பிக்பாஸ்’ ஷிவானி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் முக்கிய படங்களில் ஒன்றான ‘விக்ரம்’ உலகம் முழுக்க வரும் ஜூன் 3-ம் தேதி வெளியாவுள்ளது.
இதனை முன்னிட்டு படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது. கமல் குரலில் பாடியுள்ள படத்தின் முதல் பாடலான ‘பத்தல பத்தல’ கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.
அந்தப் பாடலில் மத்திய அரசை திருடன் என்றும், கொரோனா தடுப்பூசி திட்டத்தை விமர்சித்தும், சாதிய ரீதியாக பிரச்னைகளை தூண்டும் வகையிலும் அமைந்துள்ள வரிகளை நீக்க வேண்டுமென வலியுறுத்தியும் சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ. செல்வம் என்பவர் தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான கருத்துகளுடன் ட்ரெய்லர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
செல்வம் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சரிதா நேற்று அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீஸில், ராஜ்கமல் நிறுவனத்திற்கு அந்த நோட்டீஸ் கிடைக்கப் பெற்ற இரண்டு நாட்களுக்குள் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை நிறுத்த வேண்டுமென்றும், சம்மந்தப்பட்ட வரிகளை நீக்க வேண்டுமென்றும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தவறும் பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே விக்ரம் படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா தற்போது சென்னையில் அமைந்துள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.