சொந்த அணியால் அசிங்கப்படுத்தப்பட்ட டேவிட் வார்னர் - கொந்தளிக்கும் ரசிகர்கள்
சென்னை அணிக்கு எதிரான போட்டியின் போது டேவிட் வார்னரை ஹைதராபாத் அணி மைதானத்திற்கே வர அனுமதிக்கவில்லை என தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஐபிஎல் தொடர்களில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக திகழ்ந்த முன்னாள் சாம்பியன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, நடப்பு தொடரில் பரிதாபமான நிலையில் உள்ளது. 11 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இந்த தொடரின் தொடக்கத்தில் ஹைதராபாத் அணி மோசமான தோல்விகளை சந்தித்ததால் அணியின் கேப்டனாக இருந்த டேவிட் வார்னர் திடீரென பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கேன் வில்லியம்சன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அதன்பின்பும் அந்த அணியின் தோல்விப்பயணம் தொடர்வது சோகக்கதை.
பின்னர் பேட்டிங்கில் சொதப்பியதால் வார்னரை ஆடும் லெவனில் இருந்தும் ஹைதராபாத் நிர்வாகம் நீக்கியது. இதனால் ஹைதராபாத் அணிக்காக இனி டேவிட் வார்னர் எப்போதும் விளையாட மாட்டார் என கூறப்பட்டது. இதனை டேவிட் வார்னரும் இதை உறுதி செய்திருந்தார். ஹைதராபாத் அணி நிர்வாகத்தின் முடிவு ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கிய நிலையில் மீண்டும் அவர்களை கோபமடைய செய்யும் வகையில் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
ஹைதராபாத் அணி நேற்று சென்னை அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி தோல்வியை தழுவியது. இப்போட்டிக்காக அனைத்து வீரர்களும் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர். ஆனால் டேவிட் வார்னரை மட்டும் ஹைதராபாத் அணி மைதானத்திற்கே அழைத்து வரவில்லை, அவருக்கு மைதானத்திற்கு வர அனுமதியும் கொடுக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
வார்னரும் ஹோட்டல் அறை டிவியில் கிரிக்கெட் பார்க்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த சம்பவத்தை குறிப்பிட்டு ரசிகர்கள் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.