ஹைதராபாத் அணியில் இனி வார்னர் இல்லை - ரசிகர்கள் சோகம்

david warner RRvSRH
By Petchi Avudaiappan Sep 28, 2021 10:09 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

ஐபிஎல் தொடரின் இந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு இனிமேல் களமிறங்க வாய்ப்புக் கிடைக்காது என பயிற்சியாளர் ட்ரீவோர் பேலிஸ் தெரிவித்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

துபாயில் நேற்று முன்தினம் நடந்த ஐபிஎல் போட்டியின் 40-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோற்கடித்தது . நடப்பு தொடரில் தொடர்ந்து 8 தோல்விகளைச் சந்தித்து வந்த சன்ரைசர்ஸ் அணி 2வது வெற்றியைப் பெற்றுள்ளது.

இதனால் ப்ளேஆஃப் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பு சன்ரைசர்ஸ் அணிக்கு முடிந்துவிட்டது என்றாலும் இன்னும் அந்த அணிக்கு 4 போட்டிகள் உள்ளன. அடுத்துவரும் 4 போட்டிகளும் வலுவான அணிகளுக்கு எதிரானது என்பதால் இனிவரும் போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணியில் உள்ள இளம் வீரர்கள், ஒரு போட்டியில்கூட களமிறங்காத வீரர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களின் திறமையை பரிசீலிக்கத் திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக  அணியின் பயிற்சியாளர் ட்ரிவோர் பேலிஸ் அளித்த பேட்டியில், அடுத்துவரும் சில நாட்களில் 18 வீரர்களைக் கொண்ட அணியைத் தேர்வு செய்தபின் அனுபவ வீரர்களை அமரவைப்போம்.அதில் வார்னர் பார்வையாளரகவே தொடர்ந்து, இளம் வீரர்களுக்கு வழிகாட்டுவார் எனவும் தெரிவித்தார். 

இதனை உறுதிசெய்யும் விதமாக ரசிகர் ஒருவர் ராஜஸ்தான் போட்டியின் போது  ‘யாராவது டேவிட் வார்னரை பார்த்தீர்களா?' என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இதற்கு ரிப்ளை செய்த வார்னர் ‘இனிமேல் என்னைப் பார்க்க முடியாமல் கூட போகலாம். எனினும் தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் என பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.