“நீங்க என்ன அனுப்புறது.. நானே போறேன்” - ஹைதராபாத் அணியை விட்டு வெளியேறும் வார்னர்
அடுத்தாண்டு நடக்கவுள்ள ஐபிஎல் ஏலத்திற்கு நான் எனது பெயரை பதிவு செய்வேன் என ஹைதராபாத் அணி வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் முன்னாள் சாம்பியனான ஹைதராபாத் அணி நடந்து முடிந்த 2021 தொடரில் மோசமாக விளையாடி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. அந்த தொடக்க வீரரான டேவிட் வார்னர் இந்த ஆண்டு தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதன் காரணமாக பாதி தொடரின்போது சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அவர் அடுத்த சில போட்டிகளில் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த தொடர் முழுவதுமே 8 போட்டிகளில் விளையாடிய அவர் 190 ரன்களை மட்டுமே குவித்தார்.
அதுமட்டுமின்றி அடுத்த ஆண்டு மேலும் இரு அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகளுடன் ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கும் நிலையில் மிகப்பெரிய அளவில் வீரர்களின் ஏலமும் நடக்கவுள்ளது.
இதன் காரணமாக ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்கவைக்க வேண்டிய வீரர்கள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் 4 வீரர்களை தக்க வைக்க பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. இதனால் ஹைதராபாத் அணியில் வார்னர் வெளியேற்றம் உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் தான் சன்ரைஸ் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டாலும் நிச்சயம் ஐ.பி.எல் தொடரில் விளையாடுவேன் என்று டேவிட் வார்னர் கூறியுள்ளார். நிச்சயம் நான் ஒரு புதிய துவக்கத்தை எதிர்பார்த்து விளையாட உள்ளேன். மேலும் அடுத்த ஆண்டு எந்த அணி என்னை ஏலத்தில் எடுத்தாலும் அந்த அணிக்காக முழுவீச்சில் விளையாட தயாராக இருப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.