சாதனை மேல் சாதனை.. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த வார்னர் - கொண்டாடும் ரசிகர்கள்
டி20 உலகக்கோப்பை தொடரின் ‘தொடர் நாயகன்’ விருதை ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் பெற்று அசத்தியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி கேன் வில்லியம்சன் (85 ரன்கள்) அதிரடியால் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. தொடர்ந்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷ்(77), டேவிட் வார்னர் (53) அதிரடியால் எளிதாக வெற்றி பெற்றது,
இப்போட்டியில் வார்னர் 14 ரன்களை எட்டிய போது டி20 போட்டிகளில் அதிகமான ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸமின் (2,507 ரன்கள்), ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸின் (2,514 ரன்கள்) சாதனையை முந்தினார்.
அதேபோல் 30 ரன்களை எட்டியபோது ஒரே உலகக் கோப்பையில் தங்கள் அணிக்காக அதிக ரன்கள் சேர்த்துள்ள வீரர்களின் பட்டியலில் முன்னாள் வீரர்கள் மேத்யூ ஹேடன், ஷேன் வாட்ஸன் இருவரின் சாதனையை முறியடித்தார்.
ஐபிஎல் தொடரில் பார்மில் இல்லை அணி நிர்வாகம் வார்னரை புறக்கணித்த நிலையில், அவர்களுக்கு தனது பேட்டின் மூலம் பதிலடி கொடுத்துள்ளதாக ரசிகர்கள் வார்னரை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.