ஐசியுவில் சிகிச்சை பெற்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வார்டுபாய்!
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில், ஐ.சி.யுவில் ஆக்ஸிஜன் பொருத்தப்பட்டு சிகிச்சைப்பெற்ற ஒரு பெண் நோயாளியை வார்டுபாய் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள ஷால்பி மருத்துவமனையில் இந்த சம்பவம் திங்கள்கிழமை இரவு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட வார்டுபாய் ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்ட பெண் நோயாளியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
பாதிக்கப்பட்ட அப்பெண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், ஐ.சி.யுவில் சிகிச்சைப்பெற்று வந்துள்ளார். இந்த கொடூர சம்பவத்தின்போது அந்த நோயாளிக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்ட நிலையில் இருந்ததுடன், அவரது கைகளும் கட்டப்பட்டிருந்துள்ளன. இந்த சம்பவத்திற்குப் பிறகு, அந்த பெண் இரவு முழுவதும் அழுதுகொண்டே இருந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்த பெண் ஒரு செவிலியரிடம் தெரிவிக்க முயன்றபோது, அவரை மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
பின்னர், பாதிக்கப்பட்ட பெண் தனது கணவரிடம் காலையில் இந்த கொடூரத்தை கூறியிருக்கிறார். கணவரிடம் கூறியதால் இந்த சம்பவம் மிகவும் தீவிரமடைந்தது. பெண்ணின் கணவர் சித்ரகூட் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார் டூட்டி ரோஸ்டர் மற்றும் சிசிடிவி காட்சிகளை பரிசோதித்துள்ளனர்.
அப்போது அந்த சிசிடியில் கொடூர காட்சி பதிவாகியிருந்தது. அதனையடுத்து குற்றவாளியை அடையாளம் காண விசாரணை செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட வார்டுபாய் கரோலி மாவட்டத்தில் நாடோதி தெஹ்ஸில் வசிக்கும் குஷிராம் குஜ்ஜார் என அடையாளம் காணப்பட்டுள்ளார் " என டிசிபி பிரதீப் மோகன் சர்மா தெரிவித்தார்
தற்போது குற்றம் சாட்டப்பட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் மற்றவர்களின் தலையீடு குறித்து சி.சி.டி.வி.யைப் பார்வையிட்டு வருகின்றனர் போலீசார்.