இந்திய பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து ; முதன் முறையாக 'வார்' தொழில்நுட்பம் அறிமுகம்

india introducing women football war technology
By Swetha Subash Jan 12, 2022 08:27 AM GMT
Report

இந்தியாவில் நடக்கவுள்ள பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து புதிய வரலாறு படைக்க உள்ளது. இத்தொடரில் முதன் முறையாக 'வார்' தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்தியாவில், பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜன. 20 முதல் பிப். 6 வரை நடக்கவுள்ளது. கொரோனா காரணமாக மும்பை, நவி மும்பை, புனே என மூன்று மைதானங்களில் மட்டும் போட்டிகள் நடக்கவுள்ளன.

மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி, 'ஏ' பிரிவில் சீனா, ஈரான், சீன தைபே அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இந்திய அணி, தனது முதல் போட்டியில் ஈரானை சந்திக்கவுள்ளது.

இத்தொடரில் முதன்முறையாக 'வீடியோ அசிஸ்ட்டென்ட் ரெப்ரி' (வி.ஏ.ஆர்.,) தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் இந்தியாவில் முதன்முறையாக இந்த தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

'நாக் அவுட்' போட்டிகளில் இருந்து இத்தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.

இதற்காக நவி மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல், புனேயில் உள்ள ஷிவ் சத்ரபதி என 'நாக் அவுட்' போட்டிகள் நடக்கவுள்ள இரு மைதானங்களில் தொழில்நுட்ப வசதிகளை பொருத்தும் பணிகள் ஏற்கனவே துவங்கி விட்டன.

போட்டி நடக்கும் மைதானங்கள் தவிர, நடுவர்களின் பயிற்சி மையங்கள், தங்கியுள்ள ஓட்டலிலும் இந்த வசதி பொருத்தப்பட உள்ளது.

கால்பந்தில் நடுவர்கள் துல்லியமான முறையில் தீர்ப்புகள் வழங்க உதவும் வகையில் வி.ஏ.ஆர்., ('வார்') தொழில் நுட்பம் கொண்டு வரப்பட்டது. 2018 உலக கோப்பை கால்பந்தில் சர்வதேச அளவில் அறிமுகம் ஆனது.

இதன்படி கோல் அடிக்கப்பட்டதா, இல்லையா, பெனால்டி தந்தது சரியா, இல்லையா, 'ரெட் கார்டு' தர, 'ரெட்' அல்லது 'எல்லோ கார்டு' தவறாக தரப்பட்டதா என்பதை சரியாக கணிக்க நடுவர்களுக்கு வி.ஏ.ஆர்., உதவும்.

இதற்காக 6 வீடியோ நடுவர்களுக்கு உதவ, பல்வேறு பகுதிகளில் இருந்து 7 கேமராக்கள் நேரடி ஒளிபரப்பை வழங்கும்.

மைதானத்தின் அருகில் அமைக்கப்பட்டு இருக்குள் சிறிய ஸ்கிரீனில் நடுவர் கேட்பதற்கு ஏற்ப 'ரிவியூ' வழங்கப்படும்.

தவிர நடுவர் முடிவு தவறாக இருந்தாலும் அதுகுறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, தீர்ப்பு மாற்றப்படும்.