போரில் இருந்து பின்வாங்க போவதில்லை - ரஷ்ய பாதுகாப்பு துறை திட்டவட்டம்
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைனின் முக்கிய நகரங்களை குறி வைத்து ரஷ்ய ராணுவ வீரர்கள் பயங்கரமாக சண்டையிட்டு வருகிறார்கள்.
உக்ரைன் - ரஷ்யா போரால் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகிறார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகிறார்கள்.
இதற்கிடையில் ரஷ்யா- உக்ரைன் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை நேற்று பெலாரஸில் நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும், 2-வது முறையாக உக்ரைனின் பெரிய நகரான கார்கிவ்-இன் மத்திய சதுக்கத்தின் மீது ரஷ்ய போர் விமானங்கள் சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி வருவதாக அம்மாகாணத்தின் ஆளுநர் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், போரில் இருந்து பின்வாங்க போவதில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.
மேற்கு நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து ரஷ்யாவை பாதுகாக்க போரில் இருந்து பின்வாங்க போவதில்லை என ரஷ்யாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து 120 மணி நேரத்திற்கும் மேலாக உக்ரைன் மீது ரஷ்யா இடைவெளியின்றி தக்குதல் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.