திராவிட கொள்கைகளை காக்கும் போர் நடந்து கொண்டிருக்கிறது - மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. அதனால் அரசியல் கட்சிகள் மிகத் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. திராவிட கொள்கையை காப்பாற்றும் போர் தற்போது நடந்து கொண்டிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது அவர் கூறிய திட்டங்களை அப்போதைய மத்திய அரசு செயல்படுத்தியதாகக் கூறினார். தற்போது ஈழ தமிழர்களுக்கு அதிமுக அரசு துரோகம் செய்து வருவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
திமுக இந்து மதத்துக்கு எதிரான கட்சி அல்ல எனத் தெரிவித்த அவர், திமுக ஆட்சிக்கு வந்தால் ஆன்மிக பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஸ்டாலின் திருவண்ணாமலையில் பிரச்சாரம் செய்து வருகின்ற அதே நேரத்தில் திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி.ரெய்டு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.