சர்க்கரை நோய் வராமல் தடுக்க வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க
சிறுதானியங்களில் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வருவது டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும், சர்க்கரை நோய் வந்தவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆய்வுகளில் வெளியான தகவல்
ஃபிரான்டியர்ஸ் இன் நியூட்ரிஷியன் (Frontiers in Nutrition) என்ற ஊட்டச்சத்து இதழில் சிறுதானிய உணவு எப்படி ரத்தத்தில் சர்க்கரை அளவை, எச்பிஏ1சி அளவைக் குறைக்க உதவுகிறது என்று நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் வெளியாகி உள்ளது.
11 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை கேழ்வரகு, கம்பு, சோளம் உள்ளிட்ட சிறுதானியங்களை உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மிகப்பெரிய அளவில் பயன்படுத்தி வந்தனர்.
அரிசி, கோதுமை போன்ற பணப் பயிர்கள் மீது முதலீடு, வருவாய் அதிகரிக்கத் தொடங்கவே பலரும் சிறுதானியங்களை விட்டுவிட்டு பணப் பயிர் பக்கம் திரும்பினர்.
இதனால் ஊட்டச்சத்து மிக்க, குறைந்த தண்ணீரிலும் மகசூல் கொடுக்கும் சிறுதானியங்களைப் பலரும் மறந்துவிட்டனர்.
அதற்கு பதில் அரிசி, கோதுமை என அதிக கலோரி, கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகள் பின்னால் மக்கள் செல்கின்றனர்.
சிறுதானியங்கள் வெப்பமண்டல நாடுகளில் அதிக அளவில் விளைகின்றன. அதற்கு அதிக செலவு செய்ய வேண்டியதும் இல்லை.
அதே நேரத்தில் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், மிகக் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டதாகவும் சிறுதானியங்கள் உள்ளன.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் சிறுதானியங்கள்
சிறுதானியங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவுகிறது. இதில் அதிக கலோரி இல்லை. இதனால் உடல் எடை அதிகரிக்காது.
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற உணவு சிறுதானியங்கள்தான்.
சிறுதானியங்களில் எக்கச்சக்க ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள், பிளவனாய்ட்டுகள், டேனின் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இவை ரத்தத்தில் கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பு அதிகரிக்கத் துணை செய்கின்றன. இதனால் இதய நோய், பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது.
மேலும் சிறுதானியங்களில் உள்ள நுண் ஊட்டச்சத்துக்கள் சில வகையான புற்றுநோய் செல்களை ஆரம்பநிலையில் அழிக்கும் தன்மை கொண்டதாக இருக்கின்றது.
குறிப்பாகச் சிறுதானியங்களை உட்கொள்வது பெருங்குடல், மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. கல்லீரல் பாதிப்பு அடைவதைத் தடுக்கிறது. இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது.
இது செரிமான மண்டலம் சிறப்பாக நடக்கத் துணை செய்கிறது. சிறுதானியங்களை உட்கொண்டு வந்தால் மலச்சிக்கல், வயிறு உப்புசம், வயிற்று வலி போன்ற பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. மேலும் கல்லீரல், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படுகிறது.