அண்ணாமலை தான் வேணும்; இல்லையெனில் சாகும்வரை உண்ணாவிரதம் - போஸ்டர்களால் பரபரப்பு
அண்ணாமலை தான் வேண்டும் என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அண்ணாமலை
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதில், திமுக., அதிமுக., தவெக., பாமக., பாஜக., நாம் தமிழர் உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தலை சந்திக்கவுள்ளன.
இதற்கிடையில் கூட்டணி குறித்த முடிவுகளும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பதவியில் இருந்து மாற்ற பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போஸ்டரால் பரபரப்பு
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்றும் பாஜக நிர்வாகிகள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அவ்வாறு விருதுநகரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், "தற்குறியுடன் கூட்டணி வேண்டாம்", "கூடா நட்பு கேடாய் முடியும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தஞ்சை மாவட்டம் முழுவதும் "வேண்டும் வேண்டும்.. அண்ணாமலை வேண்டும்..
வேண்டாம் வேண்டாம் அதிமுக கூட்டணி வேண்டாம்! அண்ணாமலையை தமிழக பாஜக தலைவராக நீட்டிக்க வலியுறுத்தி 100க்கும் மேற்பட்டோர் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என்ற வகையில் குறிப்பிடப்பட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.