யூரோ 2021: வேல்ஸ் அணியை வீழ்த்திய இத்தாலி - இரு அணிகளும் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்!
இத்தாலி வீரர் மேட்டியோ பெசினா 39வது நிமிடத்தில் அடித்த ஒரே கோல் வெற்றி கோலாக மாறி வேல்ஸ் அணியை விழ்த்தியது.
சுவிட்சர்லாந்து அணியை விட கோல் வித்தியாசத்தில் முன்னிலை பெற்ற வேல்ஸ் அணி நேரடியாக நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றது.
சுவிட்சர்லாந்து அணி சிறந்த 3வது அணியாக இறுதி-16 அணிகள் சுற்றுக்குத் தகுதி பெற வாய்ப்புள்ளது. தொடர்ந்து 30-வது ஆட்டமாக இத்தாலி அணி தன் தோல்வியற்ற சாதனையை நீட்டித்துள்ளது.
இத்தாலி அணி தன் ஆட்டத்தின் மூலம் யூரோ கோப்பை 2020 தங்களுக்குத்தான் என்று மற்ற அணிகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஸ்டேடியோ ஒலிம்பிகோவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இத்தாலி அணியில் அதன் கோச் 8 மாற்றங்களைச் செய்து சோதனை முயற்சியில் ஈடுபட்டார்.
ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் மேட்டியோ பெசினா வலுவான வேல்ஸ் தடுப்பணையை ஊடுருவி கோலை அடித்தார். அதே வெற்றிக்கான கோல் ஆனது, 10 வீரர்களுடன் ஆடினாலும் இத்தாலியால் 2வது கோலை அடிக்க முடியாத அளவுக்கு உறுதியுடன் ஆடியது வேல்ஸ் அணி.
கடைசியில் வேல்ஸ் அணியின் கேப்டன் காரெத் பேலுக்கு ஒரு அருமையான பொன் வாய்ப்பு கோல் அடிக்கக் கிடைத்தது ஆனால் அதை அவர் கோலாக மாற்றத்தவறினார்.
12 அடியில் அவரை யாரும் கவர் செய்யவில்லை, கோலாக அடிக்க வேண்டிய வாய்ப்பை வெளியே அடித்தார். இதனால் இத்தாலி 1-0 என்ற கணக்கில் வென்று இரு அணிகளுமே இறுதி -16 நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றன.