போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு - சிஐடியூ, ஏஐடியூசி எதிர்ப்பு
சென்னை குரோம்பேட்டையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை
ஊதிய உயர்வு தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் இன்று 7-வது கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் சிஐடியு சங்க தலைவர் சவுந்தரராஜன், பொதுச் செயலாளர் ஆறுமுகநயினார், எஸ்எம்எஸ் சங்க தலைவர் சுப்பிரமணிய பிள்ளை ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சிஐடியு சங்க தலைவர் சவுந்தரராஜன், 90 சதவீத பிரச்சனைகளில் உடன்பாடு எட்டப்பட்டுவிட்டது.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்ற ஊதிய ஒப்பந்தம் என்ற அரசின் நிபந்தனைக்கு சிஐடியூ, ஏஐடியூசி தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.
5 சதவீதம் ஊதிய உயர்வு
இந்த நிலையில் போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு அளிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு ஒப்பந்தம் மூலம் ஓட்டுநர்களுக்கு ரூ. 2012-ல் இருந்து ரூ. 7,981 வரை ஊதிய உயர்வு கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

நடத்துனர்களுக்கு ரூ. 1965 முதல் ரூ. 6640 வரையிலும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ரூ. 9329 வரையிலும் ஊதிய உயர்வு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இனி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊதிய ஒப்பந்தத்தில் சிஐடியூ, ஏஐடியூசி தொழிற்சங்கங்களை தவிர மற்ற தொழிற்சங்கள் ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.