ரஜினி கட்சி ஆரம்பித்து ஆட்சிக்கு வந்திருந்தால் யோகி மாதிரிதான் இருந்திருக்கும் - திருமாவளவன் ஆவேசம்!
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நடிகர் ரஜினிகாந்தை விமர்சித்து பேசியுள்ளார்.
காலில் விழுந்த விவகாரம்
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே பட வேலைகள் முடிந்ததும் 4 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் இமயமலைக்கு புறப்பட்டு சென்றார்.
இமயமலை பயணம் முடித்து விட்டு உத்திரபிரதேசம் சென்ற ரஜினிகாந்த் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்க அவரின் இல்லத்திற்கு சென்றார். ரஜினிகாந்தை வரவேற்க வாசலுக்கு யோகி ஆதித்யநாத் வந்தபோது அவரின் காலில் விழுந்தார் ரஜினி. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.
அண்மையில் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி சந்திரா செல்வி ஆகியோர் சக மாணவர்களால் சாதிய போக்குடன் அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து இன்று நெல்லை வண்ணார் பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருமாவளவன் விமர்சனம்
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நடிகர் ரஜினிகாந்தை விமர்சித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது 'யோகி ஆத்யநாத் காலில் போய் ரஜினிகாந்த் விழுந்து விட்டு வருகிறார். பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது.
ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து இருந்தால்.. ஆட்சி அமைத்து இருந்தால்..யோகி ஆதித்யநாத் முதல்வரானது போல தமிழ்நாடு ஆகியிருக்கும். எவ்வளவு பெரிய வேதனையாக உள்ளது. எவ்வளவு உயர்ந்த இடத்தில் ரஜினிகாந்தை நாம் வைத்திருந்தோம். தலைவர்களை போய் சந்திப்பது, முதல்வரை சந்திப்பது பிரச்சினை இல்லை. ஆனால் ரஜினிகாந்த் காலடியில் போய் வணங்குகிறார். அதற்கு என்ன பொருள். யோகி ஆதித்யநாத்தை உயர்வாக மதிப்பது என்பது ஒருபுறம் இருக்கட்டும்.
அது உங்களுக்குள் இருக்கும் உறவு. ஆனால் உங்களைப் பற்றி தமிழக மக்கள் எவ்வளவு உயர்வாக மதித்து கொண்டு இருந்தார்கள். எப்படிப்பட்ட உறவு உங்களுக்குள் இருந்தது என்பதை நீங்கள் காட்டி விட்டீர்கள். இப்படிப்பட்டவர்களின் கைகளில் தான் தமிழ்நாடு இன்று இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள்தான் கருத்துருவாக்கம் செய்யும் இடங்களில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சக்திகளிடம் இருந்து தமிழ்நாட்டை மட்டுமின்றி இந்தியாவையே நாம் பாதுகாக்க வேண்டும் என்று திருமாவளவன் பேசியுள்ளார்.