அனுமதியின்றி லாரிகள் மூலம் வந்த வாக்கு இயந்திரங்கள் - அதிகாரிகளுடன் திமுகவினர் கடும் வாக்குவாதம்!
தூத்துக்குடி வாக்குகள் எண்ணும் மையத்திற்கு உரிய ஆவணமின்றி, பயன்படுத்தப் படாத வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டது. இதனால், அதிகாரிகளுடன், திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து, தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்கு பதிவான, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மைத்திற்கு நேற்றிரவு கொண்டு வரப்பட்டது.
இதைத்தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு 3 கட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு உரிய ஆவணங்கள் இன்றி கண்டெய்னர் லாரிகள் வாக்குப்பதிவு மையத்திற்கு வந்தது.
இதனால் அங்கு திரண்டிருந்த திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், இதுகுறித்து வாகன ஓட்டிகளிடம் விசாரித்தனர். அதற்கு வாகன ஓட்டி உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அரசியல் கட்சியினர், வானங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அங்கு விரைந்து வந்த ஆட்சியர் செந்தில் ராஜ், கண்டெய்னர்களில் கொண்டுவரப்பட்டவை வாக்கு எண்ணும் மையங்களில் பழுதானவை மற்றும் பழுதானவற்றுக்கு பதிலாக மாற்ற வைக்கப்பட்டிருந்த எந்திரங்கள் என கூறினார்.
மேலும், அவற்றை வாக்குப்பதிவு குடோனுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். இதனையடுத்து, அரசியல் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.