கூகுள் பே மூலம் வாக்குக்கு லஞ்சம்: பணப்பரிமாற்ற செயலிகளுக்குத் தடை கோரி மனு!
ஏப்ரல் 6ம் தேதி வரை கூகுள் பே உள்ளிட்ட பணப்பரிமாற்ற செயலிகளுக்கு தடை விதிக்கக் கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் மதுரை வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன் கோரிக்கை மனு அளித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அரசியல் கட்சியினர் சிலர்பணப்பட்டுவாடாவுக்கு வாக்காளர்களின் செல்போன் எண்களை சேகரித்து, கூகுள்-பே போன்ற ஆன்லைன் பண பரிமாற்ற தளங்கள் மூலம் பணம் பட்டுவாடா செய்வதை சில கட்சியினர் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின. கோவையில் வேட்பாளர்களின் கூகுள் பே எண் அடங்கிய பட்டியல் தேர்தல் ஆணையத்தால் கைப்பற்றப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹுவிடம் மதுரை வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அதிமுக அமைச்சர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமேசான், பேடிஎம், போன் பே, கூகுள் பே போன்ற செயலிகள் மூலம் பணம் பட்டுவாடா நடைபெறுகிறது.
இந்த பணப்பட்டுவாடாவினை தடுக்கும் வகையில் ஏப்ரல் 6ம் தேதி வரை பணப்பரிவர்த்தனை செயலிகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் தடை விதிக்காவிட்டால் நீதிமன்றத்தை நாட நேரிடும், என்று கோரிக்கை வைத்துள்ளார்.