மதத்தை வைத்து வாக்கு: மமதா பானர்ஜிக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்
தமிழகத்தோடு சேர்த்து மேற்கு வங்க மாநிலத்திற்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. மற்ற நான்கு மாநிலங்களிலும் அனைத்து கட்ட தேர்தலும் முடிந்துவிட்ட நிலையில் மேற்கு வங்கத்தில் ஐந்து கட்ட தேர்தல் பாக்கி இருக்கிறது. இங்கு மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசும், பாரதிய ஜனதா கட்சியும் நேரடியாக மோதுகின்றன.
காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திக்கின்றன. ஆனால் தேர்தல் கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் திரிணாமுல் காங்கிரசுக்கும் பாரதிய ஜனதாவுக்குமே கடுமையான போட்டி நிலவும் என்று தெரிவிக்கின்றன. தமிழகத்தைக் காட்டிலும் இந்தத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் தான் பாஜக அதிக கவனம் செலுத்தி வருகிறது.
பிரதமர் மோடி தொடங்கி பல்வேறு பாஜக தலைவர்கள் மற்றும் முதல்வர்கள் மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மமதா பானர்ஜிக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர்கள் அங்கு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மதத்தை வைத்து வாக்கு சேகரித்தார் என பாஜக அளித்த புகாரில் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஹூக்ளியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய மமதா பானர்ஜி, “சிறுபான்மையினரின் வாக்குகளை சிதறடிக்க விட்டுவிடாதீர்கள்” எனப் பேசியதாக பாஜக புகார் அளித்தது.
மதத்தை அடிப்படையாக வைத்து வாக்கு கேட்பது சட்டப்படி குற்றம். அதே சமயம் தேர்தல் தன்னுடைய சுதந்திரத்தையும், சார்பற்ற தன்மையையும் இழந்துவிட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. பாஜக தலைவர்கள் மீது தாங்கள் அளித்த புகார்களின் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என திரிணாமுல் எம்.பி மகுவா மொய்த்ரா கேள்வி எழுப்பியுள்ளது.
ஏப்ரல் மாதத்தின் இறுதியுடன் முடிவடையும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெறுகிறது. அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.