திமுகவிற்கு வாக்களித்து ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும்- உதயநிதி ஸ்டாலின் பேச்சு
நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்து இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக திமுகவை உருவெடுக்க வைத்தீர்கள், அதேபோல வரக்கூடிய சட்டமன்ற தேர்தலிலும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்து ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும் என நெல்லை பிரச்சாரத்தில் உதய நிதிஸ்டாலின் கூறினார். திருநெல்வேலி தொகுதிக்குட்பட்ட தச்சநல்லூர் பகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஏ.எல்.எஸ் லட்சுமணனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்து இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக திமுகவை உருவெடுக்க வைத்தீர்கள் அதேபோல வரக்கூடிய சட்டமன்ற தேர்தலிலும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்து ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும். எம்.பி தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களித்து மோடிக்கு மிகப்பெரிய நாமத்தை தமிழக மக்கள் சூட்டியதால் தமிழக மக்களின் மீதுமோடி கடுமையான கோபத்தில் உள்ளார். பணமதிப்பிழப்பு காலத்தில் செல்லாத காசாக அறிவிக்கப்பட்ட ஆயிரம் ரூபாயை மக்களிடம் காட்டி இந்த 1000 ரூபாய் நோட்டு செல்லாக்காசு அது போல மோடியையும் எடப்பாடியையும் செல்லாக் காசு ஆக்க வேண்டும் கருப்பு பணம் ஒழிப்பு மூலம் புதிய இந்தியா உருவாகும் என மோடி அறிவித்தார். மூன்றாண்டுகளாக தேடுகிறேன் புதிய இந்தியா எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. தமிழகத்திலிருந்து கொடுக்கப்பட்ட 15,000 கோடி ஜிஎஸ்டி வரியில் தமிழகத்தின் பங்கை தற்போது வரை திருப்பி கொடுக்கவில்லை.
கேட்டால் நிதி நெருக்கடி என்று கூறுகின்றனர். பிரதமர் பயணிக்க 8 ஆயிரம் கோடியில் புதிய சொகுசு விமானம் வாங்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றக் கட்டடம் 10 ஆயிரம் கோடியில் கட்டப்படுகிறது. நிதி நெருக்கடி காலத்தில் இவை அனைத்தும் தேவையா? மூன்றாண்டுகளாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணி துவங்கவில்லை.
எடப்பாடி பழனிச்சாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் இல்லை. சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவியைப் பெற்றவர். சசிகலா ஜெயலலிதா என இருவருக்கும் துரோகம் செய்தவர். அதிமுகவிற்கு வாக்களித்தால் தமிழகத்தை மோடியிடம் விற்றுவிடுவார்கள். தமிழகத்தின் பல்வேறு உரிமைகளை மத்திய மோடி அரசிடம் எடப்பாடி பழனிசாமி அரசு விட்டுக் கொடுத்து விட்டது.
கல்வி உரிமையை விட்டுக் கொடுத்து விட்டார்கள். நீட் தேர்வு காரணமாக 3 வருடத்தில் 14 குழந்தைகள் உயிரை மாய்த்துக் கொண்டு இருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ஒழித்துக் கட்டப்படும். மாணவர்களின் கல்விக் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும்.

திமுகவிற்கு அளிக்கும் வாக்கு மோடிக்கும் எடப்பாடிக்கு நீங்கள் கொடுக்கும் குட்டு. பிரச்சாரத்தின் போது பொதுமக்களிடம் மைக்கை கொடுத்து அவர்களை பேசவைத்து குறைகளையும் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார். திமுக ஆட்சிக்கு வந்ததும் உங்களின் குறைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும்.
கடந்த முறை ஏ.எல்.எஸ் லட்சுமணனை 600 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள். அது நியாயமா. இந்த முறை 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து அவர் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் திமுக வேட்பாளர் அப்துல் வகாப் ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.