ஜெயலலிதா பிறந்தநாள் - ஒற்றுமையை வெளிப்படுத்திய தொண்டர்கள், ஓபிஎஸ்-ஈபிஎஸ் உற்சாகம்

admk edappadi Panneerselvam
By Jon Mar 01, 2021 02:41 PM GMT
Report

ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் ஒற்றுமையை வெளிக்காட்டிய தொண்டர்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை அ.தி.மு.கவினர் தமிழகம் முழுவதும் ஒற்றுமையுடன் தங்களது இல்லங்களில் விளக்கேற்றியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் வெகு விமர்சையாக கொண்டாடினர். தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அ.தி.மு.க தொண்டர்கள் ஜெயலலிதா பிறந்தநாளன்று தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தி வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாளை தனித்துவமாக கொண்டாடும் வகையில் தொண்டர்கள் அவர்களது இல்லங்களில் விளக்கேற்றி பிரார்த்தனை செய்து உறுதி மொழி எடுத்து கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வேண்டுகோள் விடுத்தனர்.

அவர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.கவினர் உற்சாகத்துடன் தங்களது இல்லங்களில் விளக்கேற்றி பிரார்த்தனை செய்து உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரும் விளக்கேற்றி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

அ.தி.மு.க தொண்டர்கள் எழுச்சியுடன் இந்த நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்டது அ.தி.மு.க தலைமையையும் தொண்டர்களையும் மேலும் நெருக்கமாக்கியுள்ளது. முன்னதாக,அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிறந்த நாள் கேக்கை வெட்டி ஓபிஎஸ்ம் இபிஎஸ்ம் மாறி மாறி ஊட்டிக் கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இது, ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் ஒற்றுமையுடன் இருந்து கட்சியை வழிநடத்தி வருவதை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளதாக அ.தி.மு.க தொண்டர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இருவரும் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர். பின்னர் நினைவிடட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா அருங்காட்சியகத்தையும் திறந்து வைத்து பார்வையிட்டனர்.

சட்ட பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் அ.தி.மு.க தொண்டர்களிடையே ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் அ.தி.மு.க தொண்டர்களுக்கு ஜெயலலிதா கற்றுக் கொடுத்த பாடமான “ராணுவக் கட்டுப்பாடு” என்பதை கடைபிடித்து அவருக்கு நன்றி சொல்லும் விதமாக அமைந்தது.