ஒன்னு ரஷ்யா மேல நடவடிக்கை எடுங்க..இல்லைன்னா வீட்டுக்கு போங்க : கடுப்பான உக்ரைன் அதிபர்
ஐநா சபையில் பேசிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தங்கள் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் ஐநாவை முழுவதுமாக கலைத்துவிடுங்கள் என ஆவேசமாக தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இருதரப்பிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களால் ஏராளமான மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. போரை கைவிடுமாறு உலக நாடுகள் கோரிக்கை விடுத்தும், பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.
இதனிடையே போரால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ஐநா சபையில் உரையாற்றினார். அப்போது ரஷ்யாவின் போர் விதிகளை மீறிய செயலால் எனது நாடு அமைதியை இழந்திருக்கிறது. சொந்த நாட்டு மக்கள் அகதிகளாக வெளியேறி வரும் நிலையில் குழந்தைகள் என்றும் பாராமல் அவர்கள் கொல்லப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
அப்போது ரஷ்யாவின் தாக்குதலால் பலியானவர்களின் உடல்கள் இருக்கும் வீடியோவைக் காட்டி இதுபற்றி உடனடியாகச் செயல்படுங்கள் இல்லையென்றால் ஐநாவை முழுவதுமாக கலைத்துவிடுங்கள் என ஆவேசமாக பேசினார். இவற்றிற்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கும் வேறுபாடில்லை. அந்த வகையில் ரஷ்ய படைகளை போர் குற்றங்களுக்காக நீதியின் முன் உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.