முடிவுக்கு வராத யுத்தம் : ஜோ பைடன் உடன் , உக்ரைன் அதிபர் பேசியது என்ன?

joebiden volodymyrzelensky
By Irumporai Mar 06, 2022 05:41 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தொலைபேசியில் பேசினார். உக்ரைனில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட போர் இன்று 11 ஆவது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது.

நேற்றைய தினம் சில மணி நேரங்களுக்கு மீட்பு பணிகளுக்காக மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தப்பட்டது. இதையடுத்து ரஷ்யா மீண்டும் தனது தாக்குதலை வெறிக் கொண்டு நடத்தி வருகிறது.

உக்ரைன் நாட்டின் வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கக் கோரி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தார்.

அதை நேட்டோ ஏற்க மறுத்துவிட்டது. உக்ரைனால் தாக்குப் பிடிக்க முடியாவிட்டால் பிற ஐரோப்பிய நாடுகளாலும் தாக்குப்பிடிக்க முடியாது. உக்ரைன் மக்கள் தொடர்ந்து ரஷ்யாவுக்கு எதிராக போராடுவார்கள் என ஜெலன்ஸ்கி கூறியிருந்தார்.

உகரைனில் கடும் போர் நடக்கும் நிலையில் அவ்வப்போது பொதுவெளியில் டிஜிட்டல் திரையில் தோன்றி மக்களுக்கு நம்பிக்கையை கொடுத்து வருகிறார் ஜெலன்ஸ்கி இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொலைபேசியில் பேசியுள்ளார்.

இதுகுறித்து ஜெலன்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதில் அவர் கூறுகையில் அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். அவரிடம் பாதுகாப்பு, உக்ரைனுக்கான நிதியுதவி, ரஷ்யாவுக்கு எதிராக தொடர் தடைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினேன் என ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 24 ஆம் தேதி 350 டாலர் மதிப்பிலான ஆயுதங்களை அமெரிக்கா உக்ரைனுக்கு அனுப்பியுள்ளது. இது அமெரிக்க வரலாற்றில் மிக அதிகமான ஆயுத உதவியாகும். இந்த ட்வீட் போடுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் அமெரிக்க எம்பிக்களுடன் வீடியோ காலில் பேசிய அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டாதாக ஜெலன்ஸ்கி கூறினார். தற்போது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது