திவாலாகும் நிலையில் வோடஃபோன் -ஐடியா கம்பெனி: 27 கோடி வாடிக்கையாளர்களின் நிலைமை என்ன?

vodafone idea
By Petchi Avudaiappan Aug 06, 2021 12:27 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in வணிகம்
Report

பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான வோடஃபோன் - ஐடியா நிறுவனம் திணறவைக்கும் கடன் சுமையால் திண்டாடி வருவதால் திவாலாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் - ஐடியா நிறுவனத்திற்கு நாடு முழுவதும் 27 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். கிட்டத்தட்ட 10,000-க்கும் மேற்பட்டோர் அந்நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.

திவாலாகும் நிலையில் வோடஃபோன் -ஐடியா கம்பெனி: 27 கோடி வாடிக்கையாளர்களின் நிலைமை என்ன? | Vodafone Idea Struggles To Stay Afloat

இதனிடையே வோடஃபோன் - ஐடியா நிறுவனத்திடம் தற்போது ரூ.350 கோடி ரொக்கம் மட்டுமே கையிருப்பில் உள்ளதாகவும், தற்போதைய நிலையில் நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் உரிமையாளர்கள் இருப்பதாகவும் அரசுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அந்நிறுவனம் மத்திய அரசுக்கு மட்டுமே ரூ.1.5 லட்சம் கோடிக்கு மேல் பணம் செலுத்த வேண்டியுள்ளது.

இதைத் தவிர வங்கிகளிடமிருந்து பெறப்பட்டுள்ள ரூ.23 ஆயிரம் கோடி கடனுக்கான வட்டியையோ அல்லது அசலையோ திரும்ப செலுத்தவும் வழி தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்தே ரூ.25,000 கோடியை கடன் மூலமாக திரட்ட வோடஃபோன் - ஐடியா நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.

ஆனால் இதுவரை அந்த தொகைக்கு ஏற்பாடு செய்ய உரிமையாளர்களால் இயலவில்லை என கூறப்பட்டுள்ளது. மேலும் நிறுவனத்தின் பங்குகளும் இந்திய பங்குச் சந்தைகளில் பெரும் சரிவை சந்தித்து ஒரு பங்கு வெறும் ஆறு ரூபாய்க்கு விற்கப்படும் அவலநிலை உருவாகியுள்ளது. இத்தகைய நிலையில், வோடஃபோன் - ஐடியா தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு மேலும் கடன் வசதி அளிக்க இந்திய வங்கிகள் தயங்குகின்றன என்பதால் இந்த நிறுவனம் விரைவில் திவாலாகிவிடும் என கருதப்படுகிறது.

திவாலாகும் நிலையில் வோடஃபோன் -ஐடியா கம்பெனி: 27 கோடி வாடிக்கையாளர்களின் நிலைமை என்ன? | Vodafone Idea Struggles To Stay Afloat

ஒருகட்டத்தில் இந்தியாவில் 14 டெலிகாம் சேவை நிறுவனங்கள் இருந்த நிலையில், தற்போது பல நிறுவனங்கள் படிப்படியாக திவாலான நிலையில் தற்போது மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியாவும் கவிழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எனது பங்குகளை நான் இலவசமாக அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல் - எம்டிஎன்எல் வசம் கொடுத்து விடுகிறேன்.

அரசு வோடஃபோன் - ஐடியா நிறுவனத்தை எடுத்து நடத்த வேண்டும் என்று இந்த நிறுவனத்தில் 26 சதவிகிதம் உரிமையாளராக உள்ள குமார் மங்கலம் பிர்லா தெரிவித்துள்ளார். ஆனால் ஏற்கனவே பிஎஸ்என்எல் - எம்டிஎன்எல் டெலிகாம் நிறுவனத்தையே வெற்றிகரமாக நடத்த அரசு திணறும் நிலையில் இந்த கோரிக்கை சாத்தியப்படுமா என்பது சந்தேகம் தான்..இதன்மூலம் 27 கோடி வாடிக்கையாளர்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகியுள்ளது.