வாயை பிளக்க வைக்கும் ரஷ்ய அதிபர் புதினின் சொத்து விவரங்கள்
உக்ரைன் மீது கொடூர தாக்குதலை கட்டவிழ்த்து விட்டிருக்கும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் சொத்து விவரங்கள் வெளியாகியிருக்கிறது.
உக்ரைன் மீது போர் தொடுக்கப்போகிறோம் என்று கடந்த மாதம் 24-ந் தேதி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அதிரடியாக அறிவித்ததில் இருந்தே உலக நாடுகள் அவரை உற்றுநோக்கி வருகிறது. அனைவரது கவனமும் புதின் மீது தான் திரும்பியுள்ளது.

1952-ம் ஆண்டு ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் பிறந்த விளாடிமிர் புதின், 1975-ம் ஆண்டு ரஷ்யாவின் உளவு நிறுவனமான கே.ஜி.பி.யில் (KGB) பணியில் சேர்ந்தார்.
அவரது குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இதுவரை எந்த தகவலும் பொதுவெளியில் கசிந்தது இல்லை.
இந்நிலையில் ஹெர் மிட்டேஜ் கேப்பிட்டல் மேனேஜ்மெண்ட் என்ற சொத்துக்களை மதிப்பிடும் நிறுவனம் புதினின் சொத்து மற்றும் அவரின் விலையுயர்ந்த உடமைகளை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி அதிபர் புதினுக்கு 200 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாக கடந்த 2017-ல் தெரிவித்திருந்தது. இதன் இந்திய மதிப்பு ரூ.15 லட்சம் கோடி ஆகும்.

உலகின் 6-வது மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராகவும் புதின் திகழப்படுகிறார். இவரின் கைக்கடிகாரங்களின் மதிப்பு மட்டும் ரூ.5.35 கோடி ஆகும்.
பேடக் ஃபிலிப்ஸ், ஏ லேன்ஞ் அன்ட் சோஹ்னே டூபோ-கிராஃப் உள்பட பல ஆடம்பர கைக்கடிகாரங்களை புதின் வைத்துள்ளார்.
இவருக்கு சொந்தமாக 700 கார்கள், பல ஜெட் விமானங்கள், 58 ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் உள்ளன.

மேலும் பறக்கும் கிரெம்ளின் என்ற பெயரில் அவருக்கு சொகுசு விமானம் ஒன்றும் உள்ளது. இந்த விமானத்தில் அதி நவீன சொகுசு வசதிகள், தங்க முலாம் பூசப்பட்ட கழிப்பறைகள் உள்ளன.

இது தவிர்த்து இத்தாலியில் 140மீட்டர் நீளமுள்ள 6 மாடிகள் கொண்ட ‘தி ஷெஹராசேட்’ என்ற அதிநவீன சொகுசு கப்பலும் உள்ளது. இதன் மதிப்பு மட்டும் 700 மில்லியன் டாலர்.
இந்த அதிநவீன கப்பலில் ஒரு ஸ்பா, நீச்சல் குளங்கள், இரண்டு ஹெலிபேடுகள், ஒரு குளிர்காயும் நெருப்பிடம் மற்றும் அலைகளின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் சாய்ந்தபடி உணவு உண்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு டைனிங் டேபிள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மேலும் பல ரகசிய அரண்மனைகளை சொந்தமாக வைத்திருப்பதாக நம்பப்படும் புதினிடம், கருங்கடலை காணும் வகையில் ஒரு உயர்ந்த குன்றின் (க்ளிஃப்) மேல் சுமார் 190,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள மாளிகையும் உள்ளது.
பல செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட விவரங்களின் படி, புதினின் கண்ட்ரி காட்டேஜ் என்று எதிர்கட்சி தலைவர்களால் அழைக்கப்படும் இந்த மாளிகையில்,
ஃப்ரெஸ்கோ என்ற சுவரோவியங்களால் ஆன மேற்கூரைகள், கிரேக்க கடவுள்களின் சிலைகள் கொண்ட பளிங்கு நீச்சல் குளம், ஸ்பாக்கள், ஒரு ஆம்ஃபிதியேட்டர்,
ஒரு அதிநவீன ஐஸ் ஹாக்கி ரிங்க், வேகாஸ் பாணியில் உள்ள பந்தய விளையாட்டரங்கம் (கேசினோ) மற்றும் ஒரு இரவு விடுதி உள்ளது.
மேலும் நூற்றுக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள மது மற்றும் மதுபானங்களைக் காண்பிக்கும் ஒரு பார்-ரூமும் இந்த மாளிகையில் உள்ளது.
உலகின் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராக கருதப்படும் ரஷ்ய அதிபர் புதினின் இத்தகைய சொத்து மதிப்புகள் அனைவரையும் வாய்ப்பிளக்க வைக்கிறது.