உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம்: அமெரிக்காவை எச்சரிக்கும் ரஷ்யா

news russia world
By Jon Jan 25, 2021 01:17 PM GMT
Report

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரும் அதிபர் புதினின் தீவிர விமர்சகருமான அலெக்ஸி நாவல்னியை ரஷ்ய அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அலெக்ஸி நாவல்னியை விடுவிக்கக்கோரி ரஷ்யா முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்தப் போராட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

”ரஷ்ய மக்கள் தங்களது உரிமைகளை நிலைநாட்ட அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதையும், கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்துவதற்கும் அமெரிக்கா ஆதரவாக இருப்பதாக அந்நாட்டு தூதர் ரெபிக்கா ரூஸ் தன் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்” இதற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அலெக்ஸி நாவல்னி கடந்த ஆகஸ்ட் மாதம் விஷத் தாக்குதலுக்கு உள்ளாகி ஜெர்மனியில் சிகிச்சை பெற்று வந்தார். நாவல்னியை கொல்ல உணவில் ரஷ்ய அரசு விஷம் வைத்துவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்தத் தாக்குதலுக்கு மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.

இச்சூழலில் ஜெர்மனியில் சிகிச்சை பெற்று குணமடைந்த நாவல்னி, கடந்த வாரம் ரஷ்யா திரும்பினார். நாவல்னி மீது உள்ள பழைய வழக்குகளுக்காக அவரை கைது செய்து ரஷ்யா அரசு சிறையில் அடைத்தது. தற்போது வரை சுமார் 3,500 பேரை ரஷ்ய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

போராட்டங்களில் பங்கேற்பவர்கள் கைது செய்யப்பட்டு காலவரம்பின்றி சிறையில் அடைக்கப்படுவார்கள் என ரஷ்ய காவல்துறை எச்சரித்துள்ளது.