போயஸ் இல்லத்தில் ரஜினிகாந்தை சந்தித்த சசிகலா - என்ன காரணம் தெரியுமா?
நடிகர் ரஜினிகாந்தை சசிகலா சந்தித்து பேசிய புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் சிறையில் இருந்து விடுதலையான சசிகலாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது சசிகலாவின் உடல் நலம் பற்றி நடிகர் ரஜினிகாந்த் கேட்டறிந்தார். சென்னை திரும்பிய சசிகலாவை ஏராளமான அரசியல் பிரமுகர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதனிடையே சில மாதங்களுக்கு முன்னர் மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று ரஜினிகாந்த் வீடு திரும்பினார் . இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்று சசிகலா சந்தித்து பேசிய புகைப்படம் இன்று இணையத்தில் வைரலானது.
இந்த சந்திப்பின் போது ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் உடனிருந்தார். இதுதொடர்பாக சசிகலா தரப்பில் வெளியிடப்பட்ட கடிதத்தில் நேற்று மாலை ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சசிகலா சந்தித்து பேசினார். ரஜினிகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு தற்பொழுது முற்றிலுமாக குணமடைந்து வந்துள்ளதை அறிந்து நேரில் சென்று சந்தித்து அவர்களுடைய உடல் நலனை பற்றியும் கேட்டு அறிந்தார்.
மேலும் ரஜினிகாந்த், கலையுலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கும் தனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளையும் சசிகலா தெரிவித்து கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.