சின்ன கலைவாணர் விவேக் மறைவுக்கு மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்திய ரசிகர்கள்
திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் மறைவுக்கு அவரது ரசிகர்கள் பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில் மரக்கன்று நட்டு அஞ்சலி செலுத்தினர்.
நகைச்சுவை நடிகரும், தமிழில்ஏராளமான படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர் என்று புகழப்பட்டவருமான நடிகர் விவேக் (59) நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று காலை உயிரிழந்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம்வளர்ப்பு என அக்கறை காட்டியவிவேக் இதுவரை 33 லட்சத்துக்கும் மேல் மரக்கன்றுகளை நட்டுள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் மறைந்த விவேக்குக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகபல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில் அவரது ரசிகர்கள் மரக்கன்றுகளை நட்டனர். பின்னர் மரத்தின் அருகில் விவேக் படத்தைவைத்து மலர் அஞ்சலியும் செலுத்தினர்.
இதுகுறித்து ரசிகர்கள் கூறியதாவது,
நடிகர் விவேக் மறைவு தமிழகத்துக்கும், சினிமா துறையினருக்கும், ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும். சினிமாவில் பலரை சிந்திக்கவும், சிரிக்கவும் வைத்த விவேக் இன்று நம்மிடம் இல்லை.
அவர் இருக்கும்போது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி 33 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளார். அனகாபுத்தூர் பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு விவேக்கின் மறைவுக்கு ரசிகர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மேலும், விவேக்கின் புகழுக்கு பெருமை சேர்க்கும்வகையில் காவல் துறை மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது. இதற்கு ரசிகர்கள் சார்பில்
தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.