நடிகர் விவேக் மறைவுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பள்ளி மாணவிகள்
மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு பள்ளி மாணவிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
'சின்ன கலைவாணர்' என அழைக்கப்படும் நடிகர் விவேக்கின் திடீர் மறைவையொட்டி கும்பகோணத்தில் பள்ளி மாணவ, மாணவியர் அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன், தமிழகமெங்கும் மரக் கன்றுகளை நடும் அவரது லட்சியக் கனவை நிறைவேற்றும் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாமை வழிகாட்டியாக எண்ணி, அவரை பின்பற்றி, பல சமூக சேவைகளை செய்து வந்தார் நடிகர் விவேக். மேலும் அப்துல் கலாமின் கனவான ஒரு கோடி மரக்கன்றுகளை தமிழகம் முழுவதும் நடும் பணிகளை மேற்கொண்டு வந்தார்.
இவரது இச்செயல் பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரது திடீர் மரணம் பள்ளி மாணவ, மாணவர் மத்தியில் பெரும் சோத்தை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விவேக்கின் உருவப்படத்திற்கு மாணவ, மாணவியர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
மேலும், தமிழகம் முழுவதும் ஒருகோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற நடிகர் விவேக்கின் லட்சியக் கனவை நிறைவேற்றுவோம் என மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.