விவேக்கின் இதயத்தின் ஒரு புறத்தில் 100 சதவீதம் அடைப்பு : வெளியான அதிர்ச்சி தகவல்!
இன்று காலையில் நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது நடிகர் விவேக்கின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இதனையடுத்து, இன்று காலை ஷூட்டிங்கை முடித்து விட்டு வீடு திரும்பிய விவேக்கிற்கு, யாரும் எதிர்பார்க்காதவாறு நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து, அவரை குடும்ப உறுப்பினர்கள் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவரது இதய செயல்பாட்டை சீராக்க, தற்போது எக்மோ கருவியின் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நடிகர் விவேக்கின் உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது மருத்துவர்கள் கூறியதாவது-
காலை 11 மணியளவில் சுயநினைவு இல்லாத நிலையில் நடிகர் விவேக்கை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். கொரோனா தடுப்பூசியால் நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்படவில்லை. விவேக்கின் இதயத்தின் ஒரு புறத்தில் 100 சதவீதம் அடைப்பு உள்ளது. இதயத்தில் ஏற்பட்ட அடைப்பால் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் மிகவும் குறைந்திருக்கிறது. அவருக்கு மாரடைப்பு மற்றும் இருதய நோய்க்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விவேக்கிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருக்கு கொரோனா தொற்று ஏதும் கிடையாத என்றனர்.