மக்கள்வெள்ளத்தில் செல்கிறது நடிகர் விவேக்' உடல் :பொதுமக்கள் பிரபலங்கள் பங்கேற்பு
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நாயகனாக கால் பதித்த நடிகர் விவேக், மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தனது நகைச்சுவை மூலம், மக்களை சிரிக்க வைத்ததோடு மூட நம்பிக்கைகளுக்கு எதிராக மக்களை சிந்திக்கவும் வைத்தவர்.
அதோடு சமூக நலனில் மிகுந்த ஆர்வம் கொண்ட அப்துல் கலாம் அவர்களின் வழியை பின்பற்றி லட்சக் கணக்கான மரங்களை நட்டார். லட்சக் கணக்கான மரங்களை நட்ட இந்த மாபெரும் ஆலமரம், இன்று வேரோடு சாய்ந்து விட்டது.
ஆனாலும்அவர் நட்ட மரங்கள் என்றும் வேரூன்றி நிற்குமென அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் திரையுலகிலும் அவரது மறைவு, ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என திரையுலகினர் பலர் கண்ணீர் சிந்துகிறார்கள்.
திரையுலகில் அவர் படைத்த சாதனைகளுக்காகவும் சமூகத்தின் மீது அவர் காட்டிய அக்கறையை போற்றும் விதமாகவும் காவல்துறை மரியாதையுடன் அவரது உடலை தகனம் செய்ய அரசு ஏற்பாடு செய்திருக்கிறது.
அதற்காக சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் புடை சூழ, மக்கள் வெள்ளத்தில் நீந்தி விவேக்கின் உடல் மின்மயானத்தை நோக்கி புறப்பட்டுள்ளது.
நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலத்தில் திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது.