திரைப்படங்கள் மூலம் மூட நம்பிக்கையை தகர்த்தவர் விவேக் - அமைச்சர் ஜெயக்குமார்

vaccine corona death vivek
By Praveen Apr 17, 2021 10:49 AM GMT
Report

நகைச்சுவை நடிகர் விவேக் அதிகாலை 4.30 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

தனது திரைப்படங்களில் நகைச்சுவையின் மூலம் மக்களின் மூட நம்பிக்கையை போக்க மிகவும் முயற்சித்தவர் நகைச்சுவை நடிகர் விவேக். இவர் கடந்த நேற்று முந்தைய தினத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு நலமாக இருப்பதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று குடும்பத்தினரோடு பேசிக்கொண்டிருந்தபோது விவேக் திடீரென மயக்கமடைந்தார். இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் மாரடைப்பால் மரணமடைந்தார். இது திரையுலகில் பெரும் அதிர்ச்சி சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சாலிகிராமத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதில் அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தினார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,

"விவேக் என் நெருங்கிய நண்பர், நல்ல பண்பாளர். எப்போது சந்தித்தாலும் அந்த சந்திப்பு மகிழ்ச்சியாக இருக்கும். பேசும்போது அவரின் நகைச்சுவை உணர்வைக் கண்டு நான் பலமுறை வியந்திருக்கிறேன். அவருடைய இறப்பு திரையுலகத்துக்கு மட்டுமல்லாமல் தமிழ்ச்சமுகத்துக்கே பேரிழப்பு.

அவர் பன்முகத்தன்மை வாய்ந்தவர். நடிகர் என்பதோடு மட்டுமல்லாமல் சிறந்த வசனகர்த்தாவாகவும் இருந்தார். சுற்றுச்சூழல் பாதுகாவலராகவும் இருந்தார். இயற்கை மீது பேரன்பு கொண்டவர். வாழும் கலைவாணர் மறைந்தது அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. திரைப்படங்களின் வாயிலாக மூடப்பழக்கங்களை ஒழிக்க முயன்றவர் விவேக்.

மரம் இல்லாவிட்டால் பிரபஞ்சமே இருக்காது என்பதை உணர்ந்து மரங்களை நடுவதற்கு வலியுறுத்தியவர். முதல்வர் பழனிசாமி சார்பில் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கிறேன்" என தெரிவித்தார்.