78 குண்டுகள் முழங்க மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் உடலுக்கு அரசு மரியாதை

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் உடலுக்கு 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

நகைச்சுவையில் வெறும் சிரிப்பு மட்டுமின்றி அதில் கருத்துக்களை தெரிவித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் சின்ன கலைவாணர் விவேக். இவர் நேற்று தனது குடும்பத்தினரோடு பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.

இதனால் அவரை உடனடியாக சென்னை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.30 மணியளவில் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார்.

அவரது உடலுக்கு திரைபிரபலங்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வந்தனர்.

இந்த நிலையில் அவரின் உடலுக்கு காவல் துறை மரியாதை அளிப்பதற்கு தமிழக அரசு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ள நிலையில், அதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதனைதொடர்ந்து அவரின் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தியபின் ரசிகர்களின் கண்ணீர் கடலில் காவல்துறை மரியாதையுடன் விவேக்கின் வீட்டில் இருந்து அவரின் உடல் மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் ரசிகர்கள், பொதுமக்களுடன், திரைபிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

காவல்துறை மரியாதையுடன் மயானத்திற்கு விவேக்கின் உடல் எடுத்துவரப்பட்டதை தொடர்ந்து, அவரின் உடலுக்கு 78 துப்பாக்கி குண்டுகள் முழங்க தமிழக அரசின் காவல்துறை மரியாதை செலுத்தப்பட்டது.

விவேக்கின் புகழுக்கு பெருமை சேர்க்கவும், அவரின் கலை மற்றும் சமூக சேவையை கவுரவிக்க காவல் துறை மரியாதை வழங்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்